சென்னை: ஜெயலலிதாதான் தனது ரோல் மாடல் என்றும், எந்த சவால்களையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், கட்சி நடவடிக்கைகளை விஜய்காந்த் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் – என கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 14ந்தேதி நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், தேமுதிக பொருளாதாக இருந்து வரும் பிரமேலதா விஜயகாந்த் தேமுதிக பொதுச் செயலாளராக நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவருக்கு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், இனறு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தான் ஜெயலலிதாதான் ரோல் மாடல் என்றும் கட்சியின் நடவடிக்கைகளை விஜய்காந்த் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
தேமுதிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன்முறையாக பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அரசியலில் இருப்பதே சவால் தான்” , குறிப்பாக பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால்” என்றவர் அதற்கு உதாரணம் ஜெயலலிதா, அவர்தான எனது ரோல் மாடல் என்றார்.
கட்சியின் “பொதுச்செயலாளராக நான் தேர்வானது திடீரென எடுத்த முடிவல்ல என்று விளக்கம் அளித்ததுடன், “விஜயகாந்தின் உத்தரவுப்படியே தேமுதிகவின் செயல்பாடுகள் எப்போதும் இருக்கும் என்றவர், “எந்த லட்சியத்திற்காக தேமுதிக தொடங்கப்பட்டதோ அதை நிச்சயம் நிறைவேற்றும் முனைப்பில் பயணிப்பேன் என்றார்.
சினிமாவில் இருக்கும் வரை எல்லாராலும் விரும்பக்கூடியவராக விஜயகாந்த் இருந்தார். அரசியலுக்குள் எப்போது நுழைந்தோமோ அப்போது எல்லோரும் எதிரியாக மாறிவிட்டனர். நானும் கேப்டனும் பல்வேறு சவால்களை, இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளோம்.
திரையுலகிலும் சரி அரசியலிலும் சரி கேப்டன் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எதிர் நீச்சல் போட்டு தான் வெற்றியடைந்துள்ளார். கேப்டன் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்ட போது தான் எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. விஜயகாந்த்தின் உத்தரவின்படி தொடர்ந்து தேமுதிக பயணிக்கும் எனவும், 100 ஆண்டு கால அனுபவம் 19 ஆண்டுகளில் கிடைத்துள்ளாதாகவும் கூறினார். 2011ம் தேர்தலுக்கு பிறகு பல துரோகங்கள், அதன் பிறகு நடந்தவை விஜயகாந்துக்கு சறுக்கலை ஏற்படுத்தியது, அதனால் ஏற்பட்ட மன உளைச்சலே அவரது உடல் நலக்குறைவுக்கு மிக முக்கிய காரணம் எனவும் கூறினார்.
தற்போது எல்லோருக்கும் இருக்கும் ஐயம் என்னவென்றால் இதை எப்படி வழிநடத்தப்போகிறோம் என்பது தான். ஆனால் ஒவ்வொரு நாளும் கேப்டனில் ஆணைக்கிணங்க ஆசிர்வாதத்துடன் தான் வழிநடத்தி வருகிறோம். ”கேப்டன், தொண்டர்கள் என அனைவரும் உடன் இருப்பதால் நான் எந்த சவால்களையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். இப்போது கூட கேப்டன் நேரலையில் நான் அளிக்கும் பேட்டியை பார்த்துகொண்டுதான் இருக்கிறார். கட்சி தொடங்கிய காலம் முதல் தற்போது வரை 100 ஆண்டுகால அனுபவத்தை பெற்றுள்ளோம். இந்த அனுபவத்தின்படி நாங்கள் கட்சியை வழிநடத்துவோம்.
எனக்கு அரசியலில் ரோல் மாடல் புரட்சி தலைவி ஜெயலலிதா தான். அவர் சந்திக்காத சவால்களே இல்லை. பல சவால்களை சந்தித்து வெற்றியும் பெற்றுள்ளார்” என தெரிவித்தவர், விஜயகாந்தை திருமணம் செய்து கொண்ட நாள் முதல் தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமல்லாமல், அன்னையாக இருந்துள்ளதாகவும், விஜயகாந்த்தின் உடல்நிலை குறைவு என்பது தேமுதிகவிற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளாதாக தெரிவித்தார்.
தன்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த முடிவு என்பது அவசரம் அவசரமாக எடுத்த முடிவு இல்லை எனவும் மக்களுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் எனவும் தெரிவித்தார்.