பெங்களுரு

பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் தாம் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 

பிரபல திரைப்பட நடிகரான பிரகாஷ் ராஜ் பன்மொழி படங்களில் நடித்தவர் ஆவார். தேசிய விருது பெற்ற இவர் பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையால் பெரிதும் மனத் துயரமடைந்தார். அதற்கு பிறகு அவர் அந்த கொலைக்குநீதி கேட்டு பல பதிவுகள் வெளியிட்டார்.

குறிப்பாக இந்து தீவிரவாதிகளால் கவுரி கொல்லபட்டதால் பிரகாஷ் ராஜ் மதச்சார்பின்மைக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.  அவ்வரிசையில் அவர் பிரதமர் மோடிக்கு எதிராகவும் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

இதனால் இந்தி திரையுலக தயாரிப்பாளர்கள் பலர் அவருக்கு வாய்ப்பு அளிப்பதில்லை என பிரகாஷ் ராஜ் கூறி இருக்கிறார். இவர் பாஜகவுக்கு எதிராக தேர்தலில் களம் இறங்க தீர்மானித்தார்.

பிரகாஷ் ராஜ்  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்திய பெங்களூர் தொகுதிஉயில் இருந்து போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ரிஸ்வான் அர்ஷத் மற்றும் பாஜகவின் பி சி மோகன் ஆகியோருக்கு எதிராக இவர் களம் இறங்கினார். ஆரம்பத்தில் இருந்தே பிரகாஷ் ராஜ் கடும் பின்னடைவில் இருந்தார்.

பாஜக வேட்பாளர் மோகன் 5.4 லட்சம் வாக்குகளும் காங்கிரசின் அர்ஷட் 4.9 லட்சம் வாக்குகளும் வாங்கிய நிலையில் பிரகாஷ் ராஜ் 25 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டரில், “எனது தோல்வி எனது முதத்தில் விழுந்த பலத்த அடியாகும். என் மீது பல கோபங்கள், கண்டனங்கள், வசவுகள் வந்தாலும் நான் எனது வழியில் இருந்து மாற மாட்டேன். மதச்சார்பற்ற இந்தியாவுக்கான எனது தீர்மானம் மேலும் தொடரும்” என பதிந்துள்ளார்.