பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ‘எம்வி கங்கா விலாஸ்’ சொகுசு கப்பல் தரை தட்டியதாக தகவல் வெளியான நிலையில் அரசுத் தரப்ப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தின் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பல் பயணத்தை ஜனவரி 13 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த கப்பல் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு 51 நாட்களுக்கு பயணம் மேற்கொள்கிறது.

இந்த கங்கா விலாஸ் கப்பல் 62 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த கப்பல் மூன்று தளங்கள், 36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் திறன் கொண்ட 18 அறைகளைக் கொண்டுள்ளது, சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்கமுடியாத மற்றும் ஆடம்பரமான அனுபவத்தை வழங்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த கப்பலில் மாசு கட்டுப்பாடு மற்றும் ஒலி கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள்  உள்ளன.

இந்த கப்பல் மூன்றாம் நாள் பயணமாக பிகார் மாநிலம் சாப்ரா பகுதியில் சென்றபோது ஆழம் குறைவான நீரில் கப்பல் இறங்கியதில் தரை தட்டி நின்றதாகவும், அதிலிருந்த வெளிநாட்டுப் பயணிகளை மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சிறிய படகுகள் மூலம் மீட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக,  சமாஜ்வாதி தலைவரும் உத்தரப் பிரதேசத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவும் கேள்வி எழுப்பி இருந்தார். அத்துடன்,                சிறிய கப்பல்கள் மூலம் பயணிகள் வரும் காணொலியை பகிர்ந்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து,  உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தின் தலைவர் சஞ்சய் பந்தோபாத்யாய் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, கங்கா விலாஸ் கப்பல் திட்டமிட்டபடி பாட்னா வந்தடைந்தது. சாப்ராவில் கப்பல் தரைதட்டியதாக எழுந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. திட்டமிட்டபடி கப்பல் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது என்று  தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவே பேரிடர் குழு பணியமர்த்தப்பட்டதாகவும், கப்பலை கரைக்கு கொண்டு வந்தால் சிக்கிக் கொள்ளும் என்பதால் திட்டமிட்டபடி குறிப்பிட்ட தொலைவில் நிறுத்தப்பட்டு சிறிய படகுகள் மூலம் பயணிகளை கூட்டிச் சென்றதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள ஐந்து மாநிலங்களில் உள்ள 27 நதி அமைப்புகளில் 3,200 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு இந்த சொகுசு கப்பல் பயணிக்கிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கங்கா விலாஸ் சொகுசு கப்பலில் 80 பயணிகள் பயணிக்கலாம்.  நாட்டின் சிறந்தவற்றை உலகுக்குக் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் உலக பாரம்பரியமிக்க இடங்கள், தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், நதியின் மலைகள் மற்றும் பிகாரில் உள்ள பாட்னா, ஜார்கண்டில் உள்ள சாஹிப்கஞ்ச், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, வங்கதேசத்தின் டாக்கா மற்றும் அஸ்ஸாமின் குவாஹாட்டி போன்ற முக்கிய நகரங்கள் உள்பட 50 சுற்றுலா தலங்களுக்கு 51 நாள்கள் பயணம் மேற்கொள்கிறது. மொத்தம் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணிக்க உள்ளது.

வெளிநாட்டு பயணிகளும் இதில் பயணம் செய்ய உள்ளனர்.