முத்துலட்சுமி ரெட்டி நினைவுதினம்:  (1968)
முதல் என்ற வார்த்தையை   சொல்வது எளிது.  ஆனால் அந்த முதல் பாதையை வகுக்க, எத்தனை போராட்டங்களை சந்தித்திருக்க வேண்டும்?
அப்படி பலவித போராட்டங்களை தனது வாழ்க்கையில் எதிர்கொண்டுதான், இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக உருவானார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்கிற தமிழ்ப்பெண்.
1896ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்த முத்துலட்சுமி ரெட்டி, திண்ணைப் பள்ளியில் தான் ஆரம்பக் கல்வி படித்தார். வறுமை மிகுந்த குடும்பம். ஆகவே ஆறாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை. அப்போது, அவரது ஆசிரியர் கல்வி செலவை தானே ஏற்றார். எட்டாம் வகுப்புவரை படித்தார் முத்துலட்சுமி.
வறுமைக்கு அடுத்ததாக வந்தது அடுத்த தடை.  பெண்கள் படிப்பதே வீண் என்று நினைத்த காலகட்டம் அது. அதிலும் பூப்பெய்திவிட்டால், வீட்டோடு இருக்க வேண்டும் என்பது பொது நியதியாக இருந்தது.
ஆனால் முத்துலட்சுமி ரெட்டியின் படிப்பார்வத்தை உணர்ந்த அவரது தந்தை, ஊராரின் ஏச்சையும் பேச்சையும் பொருட்படுத்தாமல், மகளை மேலும் படிக்க அனுமதித்தார்.
1
இடைநிலைத் தேர்வை எழுதி தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற 13 பேரில் முத்துலட்சுமியும் ஒருவர்!
அடுத்து முத்துலட்சுமியின் கல்லூரி படிப்புக்கும் பல்வேறு தடைகள் ஏற்பட்டன.
ஆனால் அனைத்தையும் தகர்த்து, கல்லூரியில் ஒரு திரையின் மறைவில் முத்துலட்சுமி உயர்கல்வியைக் கற்றார்.  அதாவது பிறர் பார்த்துவிடாதபடி, திரைக்கு பின்னாலிருந்து கல்வி கற்க வேண்டும். அந்த சூழலிலும் திறம்பட படித்து,  பல்கலைக்கழக அளவில் முதல் மாணவியாக தேர்வு பெற்றார்.
1907ல் சென்னை  மருத்துவக் கல்லூரியில் எம்.பி. மற்றும் சி.எம். வகுப்பில் சேர்ந்து உயர்கல்வியைத் தொடர்ந்தார் முத்துலட்சுமி. மருத்துவப் படிப்பை முடித்த அவர், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையோடு, எழும்பூரில் உள்ள தாய் – சேய் நல மருத்துவமனையில் மருத்துவராக  பணிபுரிந்தார்.
இந்திய பெண்கள், கல்விச்சாலையில் நடைபோட, பாதை வகுத்துக்கொடுத்த தமிழ்ப்பெண் இவர் என்றால் மிகையில்லை.
பிறகு சுந்தரம் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு தாயானார்.
முத்துலட்சுமியின் அவரது தந்தையார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உரிய மருத்துவம் இன்றி உயிரிழந்தார். இது முத்துலட்சுமியின் மனதை மிகவும் பாதித்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைத்தார்.
ராயல் புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்து பயிற்சி அறுவை மருத்துவம் பற்றி சிறப்புப் பயிற்சி பெற்றார். புற்றுநோய்க்கான சிகிச்சையில் பல்வேறு ஆராய்ச்சிகளும் செய்தார்.  .
உடல் நோய்களுக்கு மட்டுமின்றி, சமூக நோய்களுக்கும் நிவாரணம் தேட முயன்றார் முத்துலட்சுமி.  அவல நிலையில் இருந்த இந்திய பெண்களின் நிலை அவர் மனதை உறுத்தியது.
பெண்களின் முன்னேற்றத்துக்காக அயராது உழைத்தார்.  இவரது முயற்சியால் பெண்களுக்கு பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. குழந்தைகள், பெண்கள் நலன் காக்க தனி மருத்துவமனை, பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, இளம் விதவைகள் கல்வி கற்க வசதி, மருத்துவமனையில், பெண் நோயாளிகளுக்கு சேவையாற்ற பெண் ஊழியர்கள் நியமனம், குழந்தைகள் திருமணத்துக்கு தடை, கோயில்களில் உள்ள தேவதாசி முறை ஒழிப்பு போன்றவை இவரது முயற்சியால் நடந்த திட்டங்களில் சில.
பெண்களின் விடுதலைக்காக ஸ்தீரிதர்மம் என்ற பத்திரிக்கையை தொடங்கி நடத்தினார். இதில், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து கட்டுரைகள் எழுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளை கவனித்துக் கொள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்று இவரது முயற்சியால் உருவானது.  மேலும் கைவிடப்பட்ட குழந்தைகள், இளம் பெண்கள், முதியோரை பராமரிக்க அவ்வை இல்லமும் இவரது முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது.   அந்த அவ்வை இல்லத்தில் தங்கியிருப்போர் கல்வி பெற வசதியாக பள்ளிகளும், ஆசிரியர் பயிற்சி பள்ளியும் துவங்கப்பட்டன.
பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் என்று கூறும் வாக்குக்கு சான்றாக வாழ்ந்து காட்டிய முத்துலட்சுமி ரெட்டி, மருத்துவராகவும், சிறந்த முற்போக்கு சிந்தனையாளராகவும் வாழ்ந்தார்.
1968ஆம் ஆண்டு அவரது உடல்நிலை பாதித்ததால் ஜூலை 22ம் தேதி மறைந்தார்.
தடைக் கற்களை படிக்கற்களாக்கி சாதனை புரிந்த முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கை, நம் அனைவருக்கும் பாடமாகும்.