புதுடெல்லி: முத்தலாக் தடைச்சட்ட மசோதா, பாரதீய ஜனதாக் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத சூழலிலும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதாவிற்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாயின.

இதன்மூலம், முத்தலாக் தடைச்சட்டம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளது.

இந்த மசோதாவிற்கு பாரதீய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதிமுக மூன்றுவிதமான நிலைப்பாடுகளை மேற்கொண்டது.

இந்நிலையில், அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளை வெளியேற வைத்து, இந்த மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டது பாரதீய ஜனதா. மசோதா வாக்கெடுப்பின்போது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பகுஜன் சமாஜ் மற்றும் தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.

இதன்மூலம் மசோதா எளிதாக நிறைவேறிவிட்டது. மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்தன.

வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் அனைவரும் மசோதாவை எதிர்த்தே வெளிநடப்பு செய்தனர். அவர்களின் எண்ணிக்கை மொத்தம் 29. எனவே, பதிவான எதிர்ப்பு வாக்குகள் 84 என்பதோடு, வெளியேறிய 29 உறுப்பினர்களின் வாக்குகளையும் சேர்த்தால் எதிர்ப்பு எண்ணிக்கை 113 ஆகிறது. எனவே, இந்த மசோதா நியாயமான முறையில் நிறைவேறவில்லை என்பது தெளிவு.