சென்னை: தமிழ்நாட்டில், 30 நிமிடங்களுக்கு மேல் திட்டமிடப்படாத மின்வெட்டு இருக்கக் கூடாது என மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தி உள்ளார்.

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரிடம் இருந்த துறைகள் பறிக்கப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக  செந்தில் பாலாஜி தொடர்ந்து வருகிறார். அவரிடம் இருந்து மின் துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மின்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு  தமிழக நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  தலைமை தாங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழகத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் திட்டமிடப்படாத மின்வெட்டு இருக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 30 நிமிடங்களுக்கு மேல் மின்சாரம் தடைபடுவது குறித்த விவரங்கள் மற்றும் விளக்கங்களையும் கேட்டறிந்தார். மின்னகம் ஹெல்ப்லைனுக்கான அனைத்து புகார்களையும் உடனடியாக கவனிக்க வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து விரிவான ஆய்வினை காணொலி மூலம் மேற்கொண்டார். இக்கூட்டத்தில் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், அனைத்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு ஆய்வுக் கூட்டத்தில், மின் பகிர்மான வட்டங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரிசெய்வதற்கும், அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

மேலும், மின்னகம் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், பொதுமக்கள் அனைவருக்கும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலங்களின் போது மின்சார வாரியம் சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்ட அமைச்சர் அவர்கள், மின்சார சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்படுமாறும், பணியாளர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் அளித்து பாதுகாப்பான முறையில் மின்கட்டமைப்பை சீர்செய்யும் பணியில் ஈடுபடுமாறும், மின்சார சீரமைப்பு பணிகளுக்கு தேவையான JCB வாகனங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும், அனைத்து வாரிய வாகனங்களையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறும், தேவைப்படின் அருகாமையில் உள்ள மின்பகிர்மான வட்டங்களிலிருந்து பணியாட்களை பணிகளில் ஈடுபடுத்துமாறும், மேலும், இத்தகைய பருவ மழைக்காலங்களின் போது மாவட்ட நிர்வாகத்தினருடன் எப்போதும் தொடர்பில் இருக்குமாறும் அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

அனைத்து மேற்பார்வை பொறியாளர்களும் தமது அலுவலகங்களில் இதற்கென தனியாக குழு அமைத்து கன மழையின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சேதாரங்கள் குறித்தும் ஆய்வு செய்து உடனடியாக அனைவருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், மின் கட்டமைப்பில் ஏற்படும் சேதாரங்களை பொறுத்து சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள் தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் தளவாடப் பொருட்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறும், குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனுக்குடன் கள ஆய்வு செய்து மின் விநியோகத்தை உடனடியாக சீர் செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.

பரு மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் முன்னுரிமை அடிப்படையில், மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் இணைப்புகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் அவர்கள் அனைத்து அலுவலகர்களுக்கும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் பல மாவட்டங்களைச் சேர்ந்த மின்வாரிய உயர் அதிகாரிகள்  காணொளி காட்சி வாயிலாகவும் கலந்துகொண்டனர்.