டில்லி

டில்லியில் கோவில் பிரசாதத்தை திருடிய குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்

டில்லி நகரில் உள்ள சுந்தர் நகரி பகுதியைச் சேர்ந்த அப்துல் வஜித் என்பவருக்கு முகமது இஸ்ரார்) என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். அப்துல் வஜித் பழக்கடை நடத்தி வரும் நிலையில், இஸ்ரார் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

நேற்றைய தினம் வீட்டில் இருந்து அதிகாலையில் வெளியே சென்ற இஸ்ரார், நீண்ட நேரமாகத் திரும்பி வரவில்லை. பிறகு ஒரு ஆட்டோவில் உடல் முழுவதும் காயங்களோடு சிலர் இஸ்ராரை அவரது வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர்.

இஸ்ராரை சிலர் மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியுள்ளது. இஸ்ஸார் உடல் முழுவதும் காயங்களுடன் வலியால் துடித்தவர் சிறிது நேரத்தில் அவரது வீட்டிலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக அப்துல் வஜித் அளித்த புகாரின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த கமால்(23), அவரது சகோதரர் மனோஜ்(19), யூனுஸ்(20), கிஷன்(19), பப்பு(24), லக்கி மற்றும் ஒரு 17 வயது சிறுவன் ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இஸ்ரார் கோவில் பிரசாதத்தைத் திருடியதாகக் குற்றம் சாட்டி அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.