டில்லி,

ராஜஸ்தான் மாநிலத்தில்  பசுக்களை ஏற்றிச்சென்ற இஸ்லாமியர் ஒருவர் பசு பாதுகாப்பு இயக்கத்தினரால் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு அகில இநிதியா காங்கிரஸ் துணைத்தலைவர்  ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1ந்தேதி  பாரதியஜனதா ஆளும் மாநிலமான ராஜஸ்தானில், ஆழ்வார் நெடுஞ்சாலையில் பசு பாதுகாப்பு அணியை சேர்ந்த ஒரு கும்பல்,  அந்த வழியாக மாடுகளை ஏற்றி வந்த வண்டியை நிறுத்தி தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது பசுக்களை ஏற்றி வந்த பால்வியாபாரி  பெலுகான் என்பவரை அந்த கும்பல் கடுமையாக தாக்கியது.  பலத்த காயம் அடைந்த பெலுகான்  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 3ந்தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.  இறந்த பெலுகான் ஹரியானா மாநிலத்தின் நுக் மாவட்டத்த சேர்ந்தவர்.

 

இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல்காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் , “சிலர் தாங்களாகவே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. இனியும் இந்த சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இப்பிரச்சினை பாராளுமன்ற  மேல்-சபையிலும் நேற்று எதிரொலித்தது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்ப தாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் குற்றம் சாட்டின.

இதற்கு பதில் அளித்த பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, “மாநில அரசு இது போன்ற எந்த சம்பவமும் நடைபெற வில்லை என்று கூறியுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.

இறுதியாக மேல்-சபை துணைத்தலைவர் பி.ஜே.குரியன் பேசுகையில், இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யட்டும். உண்மைத் தன்மையை ஆராயாமல் இது குறித்து விவாதம் செய்ய வேண்டாம் என்று இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.