திருச்சூர்

சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த சிஐடியு நிர்வாகி அப்துல் மஜீத் உடல் உறுப்புக்களை அவர் குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர்.

கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள கொடுங்கலூர் பகுதியில் அப்துல் மஜித் என்னும் 56 வயது மீன் பிடிக்கும் தொழிலாளி வசித்து வந்தர்.  அப்துல் மஜீத் மீன்பிடித் தொழிலாளர்களின் சிஐடியு சங்க மாவட்ட செயலாளர் ஆவார்.   அத்துடன் கேரள மாநில மீனவர் நல வாரிய இயக்குநர் பொறுப்பையும் இவர் ஏற்றுள்ளார்.

கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் பணியின்றி வாடும் மீனவர்களுக்குக் கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.  இதற்காக அப்துல் மஜீத் மீன்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து மனு அளித்தார். மீண்டும் ஊருக்குச் செல்லும் போது அவர் வழியில் சாலை விபத்தில் சிக்கி திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அப்துல் மஜீத் மூளைச் சாவு நிலையை  அடைந்தார். மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் அவர் நிலையைக் கூறி அவர் உடல் உறுப்புக்களை தானம் செய்தால் மரணத்தின் எல்லையில் உள்ள ஆறு பேர் உயிரைக் காக்க முடியும் எனக் கூறி உள்ளனர்.   இதற்கு இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்காது என்ற போதிலும் குடும்பத்தினர் உறுப்பு தானத்துக்கு சம்மதித்தனர்.

அப்துல் மஜீத்தின் சிறுநீரகம் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கும், கல்லூரி கொச்சி லேக் ஷயர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கும்,  இரண்டு இதய வால்வுகள் திருவனந்தபுரத்தில் இருவருக்கும், இரண்டு கண்கள் அதே ஊரில் மற்றும் இருவருக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

தற்போது ஊரடங்கு நிலவி வரும் போதிலும் தானம் அளிக்கப்பட்ட உடல் உறுப்புக்கள் சிறப்பு அனுமதி பெற்று ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு மாற்றப்பட்டுள்ளன.  மார்க்கத்தின் அனுமதி இல்லை என்னும் போதிலும் இரக்கம் காட்டிய இந்த இஸ்லாமிய குடும்பத்தினர் செயல் இதயத்தை நெகிழ வைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.