முருகப்பெருமான் ஆலயங்கள் : குமரன் குன்று மற்றும் உதயகிரி.

அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கோயம்புத்தூர் அருகே மேட்டுபாளையம் அன்னூர் சாலையில் இந்தத் தலம் அமைந்துள்ள்ளது. கல்யாண சுப்பிரமணிய சுவாமியாக அங்கு முருகப்பெருமான் அமர்ந்திருக்கின்றார்.
ஆலயங்களில் பலவகை உண்டு. தெய்வம் தானே தேடி வந்து அமர்ந்த ஆலயங்கள், சித்தர்கள் ஸ்தாபித்த ஆலயங்கள் எனப் பல உண்டு. என்றோ யாராலோ ஸ்தாபிக்கப்பட்டு பின் மீள உருவாக்கப்பட்ட ஆலயங்கள் உண்டு. சிலைகள் கண்டெடுக்கப்பட்டு அங்கு ஸ்தாபிக்கப்பட்ட ஆலயங்கள் உண்டு.
அதில் ஒன்று இந்தக் குமரன் குன்று ஆலயம்.
இந்த ஆலயத்தின் வரலாறு தொன்மையானது. என்றோ அங்கு வழிபாடு நடந்திருக்கின்றது, பின்னாளில் அது இல்லாமல் போனது, அப்படியான ஆலயம் மீண்டும் எழும்பிற்று.
மாடுமேய்க்க அப்பக்கம் வந்த சிறுவர்கள் கூடி விளையாடும் போது அங்கு வேப்பமரத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த கற்சிலை ஒன்றைக் கண்டார்கள்.
அதை முழுக்க தோண்டியபோது அது பழுதான முருகன் சிலை, தண்டாயுதபாணி சிலை என்பதை அறிந்து அங்கே ஒரு குடிசை கட்டி வழிபாட்டை தொடங்கினார்கள்.
அங்கு கேட்டவரம் கிடைத்தது, அற்புதங்கள் வாடிக்கையாயின, சாட்சிகள் பெருகின, இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்தது.
அந்தச் சிறிய குடிசை கோவிலானது, பழங்கால சிலை புதிய சிலையாக உருமாறிற்று. முருகப்பெருமான் தொடர்ந்து அங்குவரும் பக்தர்களை ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கின்றார்.
இந்த ஆலயம் தோரணா வாயில் அருகே புலிப்பாணி சித்தரின் சிலையோடு தன் பக்தர்களை வரவேற்கின்றது, புலிப்பாணி சித்தர் உலாவிய இடங்களில் அப்பகுதியும் ஒன்று.
அதை அடுத்து அரசமர விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. கோயிலுக்குச் செல்லும் பாதையில் இடும்பன், கடம்பன் சன்னிதிகள் எதிர் எதிரே உள்ளன.
கருவறையில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையோடு கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார்.
பின்பகுதியில் வைத்தீஸ்வரர், தையல்நாயகி சந்நிதி விமானங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலின் முன்புறம் மகா கணபதி, நவக்கிரகம், வீரபாகு, அருணகிரிநாதர் சந்நதிகள் உள்ளன. வழமையான கொங்கு நாட்டு தீப ஸ்தம்பம் கோயிலுக்கு வெளியேயும், கொடிமரத்தின் உட்புறமும் உள்ளன.
அங்கு ஒரு ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. சனிதோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இவரை 48 முறை வலம் வந்துவேண்டினால், சனியின் தாக்கம் குறையும்.
இந்தக் கோவில் திருமண தடைகளை நீக்கி நல்வாழ்வு தரும் ஆலயம், அதனாலே இந்த முருகருக்கு “கல்யாண சுப்பிரமணியர்” என்றும் பெயர்.
இந்தக் கோவிலில் ஐந்து தலவிருட்சங்கள் உண்டு, அவை வில்வம், வேம்பு, அரசு, காட்டுமல்லி மற்றும் காரை ஆகிய ஐந்துமாய் உண்டு.
இந்த விருட்சங்களின் அடியில் பஞ்சதரு விநாயகர், ஈசன், நாகர், இவர்கள் உண்டு. சக்தியும் உண்டு, இந்தத் தல விருட்சத்தை, ஐந்து விருடங்களை அவற்றின் தெய்வத்துடன் வணங்கினால் அற்புதம் நிகழும்.
இங்கு வருடாவருடம் நடக்கும் அதிசயம் அதாவது சித்திரை ஒன்றாம் தேசி சுவாமியின் மேல் சூரிய ஒளிபடும் அந்த அதிசயம்.
இது வருடாவருடம் அந்நாளில் நடக்கும் காட்சி, அதனால் முந்தைய இரவிலே அங்கு கூட்டம் கூடி இரவெல்லாம் பஜனை, முருகன் பாடல்கள் என வழிபாடுகளைச் செய்வார்கள், அதிகாலை சூரிய ஒளி ஸ்வாமி மேல் விழுவதை தரிசிக்கும் பரவசத்துடன் இந்த வழிபாடு நிறைவடையும்.
இங்கு கந்த சஷ்டி, விசாகம், கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. பங்குனி உத்திர விழாவும், தைப்பூசத் திருவிழாவும் இத்தலத்தின் முக்கியப் பெருவிழாக்கள், விமரிசையாகக் கொண்டாடப்படும்.
13 நாட்கள் கொண்டாடும் விழவான தைப்பூசம் அன்று கிரிவலம் நடைபெறும்.
இந்தக் கோவிலின் பூஜையில் முன்னிற்பது ஆதிதிராவிட மக்களே, அவர்கள்தான் பிரதான வழிபாட்டை செய்வார்கள்.
1பங்குனி உத்திர திருவிழாவில், கொடுமுடியில் இருந்து 108 கலசங்களில் தீர்த்தம் எடுத்து வந்து, அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பூஜை செய்வர். பின்னர் அங்கிருந்து தாரை தப்பட்டை ஓசை முழங்க, பக்திப் பரவசத்துடன் பாடல்களைப் பாடியவாறு தீர்த்தக் கலசத்தை சுமந்து வருவதும் அவர்களே.
இது காலம் காலமாக நடப்பது, இந்துமதம் சாதிய பாகுபாடு மதம் எனச் சொல்லப்படும் பெரும் பொய்யினை உடைத்துப் போடும் ஆலயம் இது.
இந்த ஆலயம் நோய்களைக் குணமாக்கும், உடல் நோய், மனநோய் உள்ளவர்கள் இத்தலத்தில் தங்கியிருந்து காலையும் மாலையும் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொண்டு முருகனை வழிபட்டு, நோய் நீங்கப் பெற்று செல்லும் அதிசயம் அடிக்கடி நடக்கும்.
இங்கு பூ போட்டு குறிபார்க்கும் வழக்கம் உண்டு. அது முழுக்க சரியான வழியினையே காட்டும், அனுதினமும் பலர் பலன் பெற்றுச் செல்கின்றனர்.
இங்குப் பக்தர்கள் நேர்ச்சை செய்வதும் அது நிறைவேறியதும் அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து இறைவனைப் பணிவதும் அன்றாட விஷயங்கள்.
இந்த முருகன் ஆலயம் சக்தி வாய்ந்தது. என்றோ புதைந்த சிலைவடிவில் முருக பெருமானே தனக்கானவர்களைத் தேடி உருவாக்கிக் கொண்ட ஆலயம் அது.
அப்படி எழுந்த முருகன் தன்னை தேடி தேடி வரும் மக்களுக்கு அன்றாடம் அருள்பாலிக்கின்றார், கூட்டம் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கின்றது.
கானகமாக இருந்த இடம் குடிசைக் கோவிலாக உருவாகி இன்று பெரும் ஆலயமாக வீற்றிருக்கின்றது. நாளுக்கு நாள் பெரிதாகி வருகின்றது என்பதற்கு முருகப்பெருமானின் அருள் ஒன்றைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்? அதைப் பெற்றுக்கொள்பவர்கள் பாக்கியசாலிகள்.
அடுத்த ஆலயம் ஈரோடு அருகே அமைந்திருக்கும் உதயகிரி ஆலயம். இங்கு எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானுக்கு முத்து வேலாயுத சாமி எனப் பெயர்.
இது இப்பக்கம் சோழர்களும் சேரர்களும் மாறி மாறி ஆட்சி செய்த காலங்களில் உருவான கோவில், சுமார் ஆயிரமாண்டு பழமையான அபூர்வ ஆலயம்.
இந்த ஆலய கற்கள் விஷேட மானவை. அந்தக் கற்களில் அமைக்கப்பட்ட அற்புதமான வேலைப்பாடுகளும், நேர் கோட்டில் அமைந்த தூண்களும் அதன் மேல் அமைக்கப்பட்ட கூரையும் ஆச்சரியமானவை மிக மிக அழகானவை.
சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோயிலாக இருக்கிறது இந்த உதயகிரி முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில். இக்கோயிலின் இறைவனான முருகப்பெருமான் முத்து வேலாயுத சுவாமி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கற்கள் கொண்டு கட்டப்படும் பழமையான கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது இக்கோயில். அற்புதமான வேலைப்பாடுகளுடன் ஒரே நேர்கோட்டில் தூண்கள், மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சித்திரை மாதம் சில நாட்கள் இங்கு சுவாமி மேல் சூரிய ஒளி விழும், உதய நேரம் அந்தக் கதிர்கள் விழுவதால் இது உதயகிரி ஆயிற்று என்பதும் சில குறிப்புகள்.
இந்த உதயகிரியில் கிழக்கு நோக்கி நின்று சுவாமி வரம் அருள்கின்றார், கருவறையில் முத்து வேலாயுத சுவாமி, நின்ற கோலத்தில் வலது கையில் தண்டத்தை ஏந்தி, இடது கையை இடுப்பில் ஊன்றியபடி காட்சி தருகிறார்.
இங்கு பஞ்ச பூதங்களும் பஞ்சலிங்கங்கள் அமைந்திருப்பது பெரும் சிறப்பு, அப்படியே ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அக்னி, வாயு உள்ளிட்ட பஞ்சலிங்களும், ஒரே மண்டபத்தில் வரிசையாக அமைந்துள்ளன. ஒரே லிங்கத்தில் 1008 லிங்கங்கள் அமைந்துள்ள சகஸ்ர லிங்கம் அமைந்துள்ளது. இது இந்த ஆலயத்தின் பெரும் சிறப்பு.
இங்கு காலபைரவர் தனி சன்னதியிலும், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகியோர் தனி சந்நிதிகளிலும் எழுந்தருளியிருக்கின்றனர்.
உள்ளே ஸ்ரீ காசிவிஸ்வநாதரும், இடது புறத்தில் ஸ்ரீ காசிவிசாலாட்சியும் எழுந்தருளியிருக்கின்றனர்.
கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், திருக்கல்யாண மண்டபம், வாகன மண்டபம், அமுத மண்டபம் என ஆகம விதிப்படி ஒரு ஏக்கர் பரப்பளவில் முழுவதும் கற்களால் அமையப்பெற்றுள்ள பழமையான கோயிலாக இக்கோயில் விளங்குகிறது.
இந்த ஆலயம் மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்டது, அன்றில் இருந்து இன்றுவரை என்ன கேட்டாலும் கொடுக்கக்கூடியது.
குறிப்பாக பகைவர்களை அடக்கி வெற்றி தரும் வரம் இந்த ஆலயத்தில் அருளப்படும், எல்லாத் தடைகளும் இங்கு நீங்கும்.
இங்குள்ள முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலையிட்டு 108 தீபமேற்றி வழிபட்டால் எதிரிகள் தடை, திருமண தடை என எல்லாத் தடைகளும் நீங்கும்.
கடன் தொல்லை நீங்கும், செல்வம் பெருகும். குறிப்பாக குழந்தை பாக்கியம் கட்டாயம் உண்டு.
இந்த இரு ஆலயங்களுமே அடிப்படையில் சூரிய ஒளி மூலவர் மேல் படும்படி, சுவாமி மேல் சித்திரையில் படும்படி அமைக்கப்பட்டவை.
இதன் அர்த்தம் இருவகையில் ஆழமானது.
அதாவது, இவை இரண்டுமே சூரியனின் அருள்மிக்க தலம், முருகப்பெருமானின் ஆலயங்கள் செவ்வாய் கிரக ஆதிக்கம் பெற்றவை அங்கே சூரியன் கூடும் போது பலம் கூடும், அங்கு வழிபட்டால் எல்லாப் போராட்டத்திலும் வெற்றிபெறும் சக்தி கிடைக்கும்.
இந்த ஆலயம் அதை அருளும்.
சூரியன் ஆரோக்கியத்துக்குமான கடவுள், லௌகீகமாக சூரிய ஒளி உடலுக்கு நல்லது. அது தோல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும்.
அவ்வகையில் இந்த ஆலயம் தோல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் ஆலயம். உடலில் தேமல், கட்டி இதர தோல் வியாதிகளால் அவதிப்படுவோர் இத்தலத்து தீர்த்தப் பொய்கையில் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை இட்டு முருகப்பெருமானை வழிபட்டால் தோல் வியாதிகள் நீங்கும்.
இரத்த ஓட்டத்தை சரி செய்து ஆரோக்கியம் தரும் ஆலயம் இது.
இந்த இரு ஆலயங்களுமே முருகப் பெருமான் தான் வந்து அமர்ந்து ஆட்சி செய்யும் ஆலயங்கள். இரண்டுமே தோல் சம்பந்தமான நோய்கள் எல்லாமும் நீங்கித் தரும். வாழ்வினை வளமாக்கித் தரும். கோவை, ஈரோடு பக்கம் செல்லும் போது இந்த ஆலயங்களைத் தரிசித்து இந்த முருகன் அருளைப் பெற்றுக்கொள்வது அவரவர் பாக்யம்.