பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சிவ சேனா கட்சி தலைவர் சுதிர் சூரி நேற்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங் “பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி வருவதையே சுதிர் சூரியின் கொலை உணர்த்துவதாக” கூறியுள்ளார்.

சிவசேனா கட்சியின் மாநில தலைவரான சுதிர் சூரி இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

அடிப்படை வாதியான இவர் ஜாதி ரீதியிலான சர்ச்சை பேச்சுகளில் சிக்கியதால் இவருக்கு கொலை மிரட்டல் இருந்து வந்தது.

மேலும் காலிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்தும் இவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனால் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அமிர்தசரஸ் நகரின் மஜிதா சாலையில் உள்ள கோபால் மந்திரில் பூஜை பொருட்கள் மற்றும் கடவுள் சிலைகள் ஆகியவை கோயிலுக்கு வெளியில் உள்ள குப்பை தொட்டியில் வீசப்படுவதாக கூறி கோபால் நகரில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார்.

அப்போது இவர் மீது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார், இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார்.

https://twitter.com/AshokShrivasta6/status/1588515926382899202

சுதிர் சூரி கொலை தொடர்பாக அந்த பகுதியில் துணி கடை நடத்திவரும் சந்தீப் சன்னி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதோடு அவரிடம் இருந்து .32 ரக பிஸ்டல் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

ஏற்கனவே, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பலமுறை சுதிர் சூரி மீது கொலை முயற்சி நடைபெற்றபோதும் அதிலிருந்து அவர் தப்பினார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தீப் சன்னி தனது கடைமுன்பு ஆர்பாட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதனால் சுதிர் சூரி ஆதரவாளர்களுக்கும் அவருக்கும் ஏற்பட்ட தகராறில் அவர் சுதிர் சூரியை சுட்டதாகவும் கூறப்படுகிறது.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் போலீசார் கண்ணெதிரில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.