சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பரபரப்புப் பேட்டி அளித்துள்ளார்.  தமிழகத்தில் திமுக அரசு திறமையற்ற அரசாக இருப்பதாகவும் அனைத்துத் துறைகளிலும் மெகா ஊழல் நடைபெறுவதாகவும், தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்து வருவதாகவும்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று நண்பகல் 12.45 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள ராஜப்வனில் சந்தித்து பேசினார். அவருடன், எடப்பாடி அணி மூத்த தலைவர்களான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,  சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்பட சிலர் கலந்துகொண்டனர். இந்த சந்திபின்போது, எடப்படி பழனிச்சாமி தரப்பில் ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில், திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராஜ்பவன் வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் நடைபெறும் மோசமான சம்பவங்களை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். திமுக அரசு அமைந்த 18 மாத காலத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள்தான் நடைபெற்று வருகிறது என்று கூறியவர்,  திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார் என்று கடுமையாக சாடினார்.

கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்தியஅரசு தகவல் தெரிவித்து, காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விஷயத்திலும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியதுடன்,  கள்ளக்குறிச்சி கனியாமூர் சம்பவத்தில் முன்கூட்டியே விசாரணை நடைபெற்றிருந்தால் வன்முறை, கலவரம் ஏற்பட்டிருக்காது.

தமிழகத்தில் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது, அண்டை மாநிலங்களில் இருந்து போதைப் பொருள் கடத்தல் சாதாரணமாக நடக்கிறது இதை தடுப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது குற்றம் சாட்டியதுடன்,  அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது என்றவர்,  திமுக அரசு என்றாலே கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்தான் என்றார்.

சமீப காலமாக   அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதிமுக ஆட்சியில் தடையின்றி மருந்துகள் விநியோகிக்கப்பட்டன என்று சுட்டிக்காட்டியவர், அரசு மருத்துவமனைகளில்  மருந்து தட்டுப்பாடு வருவதற்கு திறமையற்ற இந்த அரசாங்கம் தான் காரணம் என்று குற்றம் சாட்டியதுடன்,  உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை திமுக அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. உள்ளாட்சிகளில் வேலை நடைபெறவில்லை. ஆனால் பணத்தை வழங்குகின்றனர் என்று கூறியவர், அரசு டெண்டர்களில் முறைகேடு நடைபெறுகிறது என்று விமர்சித்தார்.

இன்று உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை திமுக அரசு பறித்துவிட்டது. ‘நம்ம ஊரு சூப்பரு’ விளம்பர பேனரில் மெகா ஊழல் நடந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ. 350 மதிப்புள்ள ஒரு பேனருக்கு ரூ. 7,906 செலவு செய்வதாக கணக்கு காட்டியுள்ளனர். பணி செய்வதற்கு முன்னரே, திமுக அரசு நிதி வழங்கி விடுகிறது. இதுவே திமுக ஊழலுக்கு உதாரணம்.

டெண்டர் இல்லாமல் பார் நடத்துதல், 24 மணி நேரமும் மது விற்பனை என டாஸ்மாக்கிலும் மெகா முறைகேடு நடந்து வருகிறது.   24 மணி நேரமும் பார்கள் இயங்கி கொண்டிருக்கின்றன. சட்டவிரோதமாகவும் பார்கள் நடத்தப்பட்டு வருகின்றன, அதை திமுக அரசும், காவல்துறையும் கண்டுகொள்வதில்லை என்றும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்,  தமிழகஅரசு கொண்டு வந்துள்ள  ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாக கூறியவர்,   திமுக ஆளுநரை விமர்சித்து வருவதும்  குறித்த கேள்விக்கு,  திமுக, ஆளுநரை விமர்சிப்பது வாடிக்கையான நிகழ்வுதானே என்றவர்,  ஆளுநர் தான் திமுகவை தட்டி கேட்க வேண்டும்” என்றும், ஆளுநரின் செயல்பாடு நன்றாக உள்ளது என்றவர் மனுமீது விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்’  என்றும் தெரிவித்தார்.