சென்னை: சென்னையில் கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் அதிர்ச்சியை எற்படுத்திய இரட்டை கொலை சம்பவம் நடைபெற்ற பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
தி.மு.க. முன்னாள் எம்.பி. மறைந்த குப்புசாமியின் உதவியாளர் குமார் என்பவர், ஒரு கும்பலால் கடத்தி படுகொலை செய்யப்பட்டு, அவரது உடலை செஞ்சி அருகே குழி தோண்டி உடலை புதைத்திருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

வடசென்னையின்எம்.பி.,யாக 3 முறை பதவி வகித்தவர், தி.மு.க., முன்னாள் எம்.பி.,யும், தொ.மு.ச., பேரவை தலைவருமான செ.குப்புசாமி. இவர் கடந்த 2013ம் ஆண்டு காலமாகி விட்டார். இவரது உதவியாளராக இருந்தவர் குமார். தற்போது 72 வயதாகும் குமார், சென்னை மாநகராட்சியில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது, சென்னை அயனாவரம் வசந்தம் கார்டன் 2-வது லேன் பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது மகள் வீடு தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ளது. அங்கு சென்று இருந்த குமார் கடந்த 16-ந்தேதி மகள் வீட்டில் இருந்து ஆட்டோவில் புறப்பட்டு வெளியே சென்ற நிலையில், அவர் தாம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கி உள்ளார். அதற்கு பிறகு அவரை காணவில்லை. அவரிடம் இருந்து எந்தவொரு தகவலும் வரவவில்லை. அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் இது பற்றி தாம்பரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாயமான குமாரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குமாருக்கும் சேலையூர் பகுதியில் வசித்து வரும் ரவி என்பவருக்கும் இடையே நில பிரச்சனை இருந்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரவியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது குமார் கடத்தி படுகொலை செய்யப்பட்டு இருக்கும் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து ரவியும் அவரது கூட்டாளிகள் 7 பேரும் குமாரை காரில் கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை செஞ்சி அருகே குழி தோண்டி புதைத்திருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரவி உள்பட 7 பேரிடம் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அவரது உடலை தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த கொலை தொடர்பான விசாரணையில், மும்பையில் வசித்து வரும் குமாரின் உறவினர் ஒருவருக்கு சொந்தமாக முத்தண்டியில் ஒரு கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை குமார் தான் பாதுகாத்து வந்துள்ளார். இதன் தற்போதைய மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் நிலையில் அந்த இடத்தை ரவி தனது கள்ளக்காதலியான தனலட்சுமி என்ற பெயரில் போலியாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
குமாரின் உறவுக்கார பெண்ணான மகாலட்சுமி பெயரில் ஒரிஜினல் நில பத்திரம் உள்ளது. இந்த இடத்தில் ரவி மகாலட்சுமி என்ற பெயரில் போலியாக வேறு ஒரு பெண்ணை தயார் செய்து தனது கள்ளக்காதலியான தனலட்சுமி பெயரில் இடத்தை பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்காக குமாரை கடத்திச் சென்று நிலத்துக்கான ஒரிஜினல் ஆவணங்களை கேட்டு காரில் வைத்தே தாக்கியுள்ளனர். இதில் குமார் மயக்க மடைந்த நிலையில், அவரை காருக்குள் வைத்து சித்ரவதை செய்து கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றுள்ளனர். பின்னர் கொலையுண்ட குமாரின் உடலுடன் செஞ்சிக்கு சென்றுள்ளனர். பின்னர் செஞ்சி அருகே காட்டுப்பகுதியில் பெரிய குழியை தோண்டி குமாரின் உடலை போட்டு புதைத்துள்ளனர். பின்னர் எதுவும் தெரியாது போல ரவி வெளியில் நடமாடி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
இதையடுத்து ரவிக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகளையும் போலீசார் பிடித்து உள்ளனர். முன்னாள் எம்.பி.யின் உதவியாளரான குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தி.மு.க.வினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொலை வழக்கில் கைதாகியுள்ள ரவி பட்டதாரி வாலிபர் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.