சென்னை:  முரசொலி பஞ்சமி நிலம்  தொடர்பான வழக்கில்,  மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என குற்றம்சாட்டி, தமிழ்நாடு பாஜக செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டு கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 14 மற்றும் டிசம்பர் 13ம் தேதிகளில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்யக் கோரி முரசொலி அறக்கட்டளை சார்பில் 2020ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அனிதாசுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “அரசியல் உள்நோக்கத்தோடு இந்தப் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக புகார் அளித்துள்ள சீனிவாசனும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய அப்போதைய துணை தலைவர் எல்.முருகனும் பாஜகவைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், கடந்த 2019ல் வேலூரில் நடந்த கூட்டம் ஒன்றில்  முரசொலி நிலம், பஞ்சமி நிலம்  பேசியதாக, தமிழக பா.ஜ.வின் அப்போதைய தலைவர் எல்.முருகன் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று அளித்த உத்தரவில் இணையமைச்சர் எல்.முருகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.