போதை பொருள் விவகாரத்தில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு நேரில் ஆஜராகும்படி ஹைதராபாத் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

கடந்த 3-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இதில் ஏற்கெனவே இயக்குநர் பூரி ஜெகன்நாத்திடம் 10 மணி நேரமும், நடிகை சார்மி கவுரிடம் 8 மணி நேரமும், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் 6 மணி நேரமும் , நடிகர் நந்துவிடம் 4 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது. நடிகர் ராணாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த 2017-ல்நடைபெற்ற போதை பொருள் விற்பனை குறித்த விசாரணையில் ராணாவின் பெயர் இல்லை. தற்போது நடிகர் ராணாவும், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவிடம் 6 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இவரின் கார் ஓட்டுநர் ஸ்ரீநிவாஸ் தான் ரவி தேஜாவை போதைப் பொருள் விற்பனையாளர் கெல்வினுக்கு அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஸ்ரீநிவாஸையும், கெல்வினையும் ரவி தேஜாவுடன் சேர்த்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, நடிகர் நவ்தீப், எஃப் கிளப் மேலாளர், நடிகை முமைத்கான், நடிகர் தனீஷ், நடிகை ரோஜாரமணியின் மகனும், நடிகருமான தருண் ஆகியோரிடமும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் 8-வது நபராக நடிகை முமைத் கான் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர்.