தேனி: சர்ச்சைகளுக்கு மத்தியில் முல்லை பெரியாறு அணை 4வது முறையாக 142 அடியை எட்டியுள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பழமையான அணையான முல்லைப்பெரியாறுஅணையை இடிக்க வேண்டும் என கேரள அரசு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுபடி அணையை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் அணை திடகாத்திரமாகவும், வலுவாகவும் இருப்பதாக அறிக்கை கொடுத்துள்ளனர். இதனால், முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்த்தேக்க கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆனால், அதை ஏற்க மறுத்து கேரள மாநிலஅரசு முரண்டு பிடித்து வருகிறது. அடுத்தடுத்து மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறது. இந்த அமளிகளுக்கு இடையே 4வது முறையாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. ஏற்கனவே 2014, 2015 மற்றும் 2018ம் ஆண்டுகளில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டிருந்தது. தற்போது 4வது முறையாக இன்று அதிகாலை 3.55 மணிக்கு 142 அடியை எட்டியது.
தற்போது அணைக்கு நீர்வரத்து 4,875 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரத்து 682 கன அடி நீர் மிழக பகுதிக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு தமிழக பொதுப்பணித்துறையினர் சார்பில் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.