முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்க்கும் பருவமழை: அணை நீர்மட்டம் 132 அடியை தாண்டியது

Must read

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை தாண்டி இருக்கிறது.

தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரம் முல்லைப்பெரியாறு அணை. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் 17 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாய நிலத்தில் இருபோக பயிர் சாகுபடி இந்த அணையை நம்பித்தான் உள்ளது.

ஆண்டு தோறும் தென்மேற்கு பருவமழையின் போது முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிக அளவில் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் போதிய மழை இல்லை. ஆகையால் அணையின் நீர்மட்டம் குறைந்தே இருந்தது.

இந் நிலையில், கேரளா மற்றும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. 5 நாட்களாக இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது. ஆகையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரத்து 740 கன அடியாக இருக்கிறது. அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. 2 நாட்களுக்கு முன்பு ஒரேநாளில் 5 அடி உயர்ந்தது. இன்று அணையின் நீர்மட்டம் 132 அடியை தாண்டியது. நீர்மட்டம் 133.00 அடியாகவும், நீர் இருப்பு 5,586 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. நீர்வரத்து 11,533 கனஅடியாகவும், அணையிலிருந்து 1,671 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More articles

Latest article