சென்னை; 142 அடி தண்ணீர் தேக்க வேண்டிய முல்லை பெரியாறு அணையில் 136 அடி தண்ணீரே நிரம்பி உள்ள நிலையில்,  தண்ணீரை  திறந்து விடவேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு,  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணை 136அடியை எட்டி உள்ளது. இதனால் இடுக்கி மாவட்ட பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் கேரள அரசு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் உச்சநீதிமன்றமோ  அணையில்142அடி வரை தண்ணீர் தேக்கலாம், அணை பாதுகாப்பாக இருக்கிறது பல்வேறு ஆய்வுகளை நடத்தி  உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதை ஏற்க கேரள அரசு மறுத்து வருகிறது. ஏற்கனவே முல்லை பெரியாறுஅணையை இடிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தியும், முறைகேடான வீடியோக்களை வெளியிட்டும், தமிழகத்துக்கு எதிராக  குரல் கொடுத்து வரும் கேரள அரசு, தற்போதும் தமிழக மக்களுக்கு எதிரான மனநிலையிலேயே இந்த கடிதத்தை எழுதி உள்ளது. முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் சேமித்தால், அது தமிழக விவசாயகிளுக்கே பலனளிக்கும். ஆனால், தடுக்கும் முயற்சியாக இந்த கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தற்போது முல்லை பெரியார் அணை 134 அடிதான் நிரம்பி உள்ளது. தமிழக அரசும் இதுபோதும் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாக தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதி உள்ள கடிதத்தில்,  முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நிலவும் அபாயகரமான சூழ்நிலையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருங்கி உள்ள நிலையில் இடுக்கி உள்ளிட்ட கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே ‘ரெட்’ அலர்ட் விடுத்துள்ளது. அதற்கேற்ப மழை பெய்கிறது.

இதே நிலை நீடித்தால் அணையின் நீர் மட்டம் கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. இப்போது அணைக்கு அதிகளவு நீர் வரத்து உள்ளது. எனவே முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நிலவும் அபாயகரமான சூழ்நிலையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

இந்திய வானிலை மையம் கணிப்புகளின்படி மழை பெய்வதால் அணைக்கு தண்ணீர் அதிகம் வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டத்தை சீராக குறைக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த விசயத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையை கருத்தில் கொண்டு அணையில் இருந்து வெளியேறும் நீர் வெளியேற்றம், உபரி நீரை விட அதிகமாக இருப்பதை உறுதி செய்ய படிப்படியாக திறந்து விட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முல்லைப் பெரியாறு அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அணையின் ஷட்டர்களை திறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே கேரள அரசுக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.