கொல்கத்தா: மேற்குவங்க முதல்வராக இருந்து வந்த, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான முகுல்ராய் கடந்த 2017ம் ஆண்டு அவரிடம் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார். தற்போது பாஜக மீதான அதிருப்தி காரணமாக, தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் தாய்கட்சி திரும்ப திட்டமிட்டு உள்ளர்ர். இதுதொடர்பாக இன்று மாலை முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார்.
நடைபெற்று முடிந்த மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிடித்து இருந்தது. பாஜக 70 இடங்களுக்கும் மேலாக பிடித்திருந்தது. மம்தாவின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைக்கண்டு இந்தியாவே வியந்தது. பாஜக கடுமையான அதிர்ச்சி அடைந்தது. காரணம், தேர்தலுக்கு முன்னதாக மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 34 சட்டமன்ற உறுப்பினர்களை விலக வைத்து, தன்பக்கம் திருப்பியது. இதனால் மேற்குவங்க மாநிலத்தில், மம்தாவின் கதை முடிந்தது என ஊடங்கள் விமர்சித்தன. ஆனால், விமர்சனங்களை தவிடுபொடியாக்கினார் மம்தா.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த அவருக்கு தேர்தலின்போது முக்கியத்துவம் கொடுக்காத நிலையில், வெறும் 13 பேருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனால் பலர் பாஜகமீது அதிருப்தியில் இருந்து வந்தனர். தேர்தல் முடிவில் மம்தா அபார வெற்றி பெற்று மத்திய பாஜக அரசுக்கு சிம்மசொப்பனமாக மாறியதால், திரிணாமுல் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய பலர் மீண்டும் தாய்க்கட்சிக்கு வருகை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில், மம்தாவின் வலதுகரமான முகுல் ராய் மூலம்‘, மாநிலத்தில் காலூன்ற நினைத்த பாஜகவுக்கு தேர்தல் சரியான பாடம் கற்றுக்கொடுத்துள்ளதுடன், திரிணாமுல் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்களுக்கும் நல்ல படிப்பினையை வழங்கியுள்ளது.
அதைத்தொடர்ந்து, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காத காரணத்தால் பாஜகவில் இணைந்த முன்னாள் டிஎம்சி எம்எல்ஏ திபெண்டு பிஸ்வாஸ், பாஜகவில் சேர்ந்தது தவறான முடிவு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், “மனச்சோர்வு தருணத்தில்” கட்சி தாவும் முடிவெடுத்ததாகவும், இப்போது மீண்டும் திரிணாமூல் காங்கிரஸில் சேர விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் பலரும் தாய்க் கழகத்திற்கு திரும்ப முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
பாஜகவில் தற்போது துணைத் தலைவராக உள்ள முகுல் ராய், சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதற்கு காரணம், அவரது மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. அப்போது, மம்தாவின் உறவினர் அவருக்கு உதவி செய்தாகவும், பாஜக தரப்பில் உதவி செய்யவில்லை என்று தகவல்கள் பரவின. இதனால் பாஜக தலைமைமீது அதிருப்தியில் இருந்து வரும் முகுராய், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் மம்தா கட்சிக்கு தாவ முடிவு செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முகுல்ராய் ஆதரவாளர்கள் 35 பேர் தற்போது பாஜக எம்எல்ஏக்களாக உள்ளனர்.
இதுதொடர்பாக மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் தகவல் வெளியிட்டு உள்ளது. அதில், பாரதிய ஜனதா கட்சியில் உள்ள 35 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சியினருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் எங்களுடன் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம் என கூறியுள்ளது. இது மேற்குவங்க மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மாநில பாஜக துணைத்தலைவரான முகுல்ராய் சந்தித்து பேச உள்ளார். அப்போது, அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேருவது குறித்து விவாதிப்பார் என தெரிகிறது.
பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான முகுல்ராய் மீது பல வழக்குகள், சிபிஐ விசாரணை என பல குற்றச்சாட்டுக்கள் இருந்த நிலையில், அவர் 2017ம் ஆண்டு பாஜகவிற்கு சென்றதும், அவர்மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டன. தற்போது எந்த வழக்குமின்றி முகுல்ராய் நிம்மதியாக உள்ளார். இந்த நிலையில், அவர் மீண்டும் மம்தாவிடம் சேர இருப்பது பாஜகவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. மேற்கு வங்க அரசியலில் விரைவில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்றம், இது மத்திய பாஜகவுக்கு மேலும் தலைவலியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.