கள்ளக்குறிச்சி
திருப்பதியில் நேற்று கைதுசெய்யப்பட்ட முகிலனை காண சென்னை வந்த அவரதுமனைவியின் கார் விபத்துக்குள்ளாகியது.
சுற்றுச் சூழல் ஆர்வலரான முகிலன் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார். அவர் திடீரென 4 மாதங்கள் முன்பு காணாமல் போனார். அவரை குறித்து பல வதந்திகள் உலவின. அவரை கண்டுபிடிக்க ஆள்கொணர்வு மனு அளிக்கப்பட்டது. அதையொட்டி அவரை தேடி வந்த சிபிசிஐடி காவல்துறை விரைவில் அவரை பிடிக்க உள்ளதாக தெரிவித்திருந்தனர்..
நேற்று திருப்பதி ரெயில் நிலையத்தில் முகிலனை ரெயில்வே காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி வெளியானது. அதை தொடர்ந்து சிபிசிஐட் யினர் முகிலனின் புகைப்படத்தை அனுப்பி அது முகிலன் என உறுதி செய்தனர். நேற்று இரவு காட்பாடியில் ஆந்திர காவல்துறையினர் முகிலனை தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
முகிலனின் மனைவி பூங்கொடி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் வசித்து வருகிறார். அவர் தனது கணவரை காண சென்னைக்கு இன்று காலை காரில் வந்துக் கொண்டிருந்தார். பூங்கொடி வந்த கார் கள்ளக்குறிச்சி அருகே வரும் போது ஒரு நாய் குறுக்கே சென்றுள்ளது. அதனால் அந்த கார் விபத்தில் சிக்கியது.
முகிலனின்மனைவிக்கும் உடன் வந்தவர்களுக்கும் இந்த விபத்தில் லேசான காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. முகிலனின் மனைவியும் மற்றவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு மீண்டும் பயணத்தை வேறொரு காரில் பயணத்தை தொடர்ந்து சென்னை வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.