முடிகொண்டான் கோதண்டராமர்  ஆலயம்

மயிலாடுதுறையிலிருந்து சுமார் 25  கிமீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் முடிகொண்டான். மகுடதரன் என்ற சோழ அரசன் நிர்மாணித்த ஊரே முடிகொண்டானாயிற்று. திருவாரூர் சாலையில் கொல்லுமாங்குடி, பேரளம், பூந்தோட்டம் இவற்றைத் தாண்டியவுடன் நாம் முடிகொண்டான் ராமபிரானின் ஆலயத்தின் எழில்மிகு ஸந்நிதி கோபுரத்தைச் சாலையிருந்தே கண்டு மகிழலாம். 01-06-2001 அன்று குடமுழுக்கு நிகழப் பெற்றதால் புதுமைப்பூச்சுடன் அழகாகக் கோவில் காட்சி அளிக்கிறது. சந்நிதி கோபுரமும் வடிவழகான வடிவங்களைத் தாங்கி நிற்கிறது. ப்ரும்மாண்ட புராணத்தில் இந்தத் தல வரலாறு கூறப்பட்டுள்ளது. இந்த ஊருள்ள இடத்திலேதான் பரத்துவாஜ முனிவர் ஆசிரமம் அமைத்துத் தவமியற்றிவந்தார், ராவணவதம் முடிந்து திரும்பும் ராமபிரானைத் தர்சிக்க.

விபீஷண பட்டாபிஷேகத்திற்குப் பின்னர் சீதை, லக்ஷ்மணன், அனுமன் மற்ற வானர வீரர்களுடன் புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு இராமபிரான் திரும்பிவருகையில் பரத்வாஜ முனிவரின் ஆச்ரமத்தைக் கண்டு அவரது தவம் பலிக்க புஷ்பக விமானத்தை இறக்கி யாவரும் அங்கே இளைப்பாறச் செய்கிறார். புளகாங்கிதம் அடைந்த பரத்வாஜர் அனைவரையும் அமுது உண்ண அழைத்த போது குல தெய்வமான ரங்கநாதரை வணங்காமல் நான் உணவருந்தமாட்டேன் என்று ராமபிரான் கூற, பரத்வாஜரின் தவவலிமைக்கு கட்டுப்பட்டு அயோத்தியிலிருந்து ரங்கநாதரும் பரத்வாஜ ஆச்ரமத்திற்கு வந்து சேர்ந்தார். அதற்குள் அனுமனிடம் தாம் பரத்வாஜ ஆச்ரமத்தில் தங்கி உள்ளதைப் பரதனிடம் கூறுமாறு செய்தி அனுப்பினார் ராமர். அனைவரும் உணவுண்டதும், அரங்கனும் முனிவரின் அன்பிற்குக் கட்டுப்பட்டு ஒரு ஸந்நிதியில் எழுந்தருளிவிட்டார்.

அன்றைய பரத்வாஜ ஆச்ரமம் இருந்த இடமே இன்றைய முடிகொண்டான் கோதண்டராமர் கோவில் இருக்குமிடம். ராமபிரானும், அவர் குல தெய்வமும் சேர்ந்து அருள்பாலிக்கும் தலம் இது. முதலில் க்ஷத்ரியகுலம் வழிபட்ட அரங்கனின் ஸந்நிதிக்குச் செல்வோம். பட்சி ராஜனை வணங்கி அரங்கன் ஸந்நிதிக்குப் போனால், அவரைப் பாலசயனராகக் காணலாம். குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி அரங்கநாதர் ஸ்ரீரங்கம் போலவே சயனித்துள்ளார், விபீஷணனுக்காகத் தென்திசையை நோக்கியவாறே. ஐந்து தலை ஆதிசேஷன் மேல் யோக சயனம். ப்ரும்மா, ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, ஸந்நிதியில் மூலவருக்கருகிலுள்ளனர்.

பரத்வாஜ மஹர்ஷியும் தொழுத வண்ணமுள்ளார். இவருக்கும் ஸ்ரீரங்கம் போலவே தைலகாப்புத் திருமேனி. உத்சவராக ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி. மற்றும் சந்நிதியில் உற்சவ மூர்த்திகளாக சக்கரத்தாழ்வார், பலிபேரர் உள்ளனர். இந்த ரங்கநாதரின் நக்ஷத்ரம் ஹஸ்தம். ஆனால் ஸ்ரீரங்கத்தில் அவருடையது ரேவதி. சந்நிதி ப்ராகாரத்தில் ஆதிசங்கரர் அருளிய ரங்நாதாஷ்டகம் எழுத்ப்பட்டுள்ளது. மற்றும் சிறிய சந்நிதியில் தும்பிக்கை ஆழ்வாரும், கண்ணனும் உள்ளனர்.

பிரதான சந்நிதியில் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் ராமபிரான் கோதண்டராமராக சீதாபிராட்டி வலப்புறமும், லக்ஷ்மணன் இடப்புறமுமாக ஸேவை தருகிறார் மூலவராக. மூலவருடன் ஆஞ்சேனயரில்லை. அவர் பரதனுக்குச் செய்தி சொல்ல நந்திக்ராமம் சென்று இருந்தபடியால் வெளியே கோவில் கொண்டுள்ளார். கருடன், ஆதிசேஷன், தும்பிக்கை ஆழ்வார், நம்மாழ்வார், விஷ்வக்ஸேனர், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ஸ்ரீ ராமானுஜர் உள்ளனர்.

உத்சவராகக் கோதண்டராமர் சீதை, லக்ஷ்மணனோடு காட்சி. இவர்கள் மிகவும் வனப்புடன் திகழ்கின்றனர். ராமபிரானின் கணுக்காலில் நரம்புகள் தெரிகின்றன தில்லைவிளாகம் மூர்த்தியைப் போல. ஆஞ்சனேயருடைய உற்சவ மூர்த்தி பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

சீதாப்பிராட்டி ராமபிரானுடனேயே சேர்ந்திருப்பதால் தனித் தாயார் சந்நிதி இல்லை. பிராதன தெய்வம் இக்கோவிலில் ராமர்தான் என்பதால் அரங்கநாதருக்கும் தனி நாச்சியார் சந்நிதி இல்லை. அரங்கன் திருவடிநிலை என்று தனியாக ஸந்நிதியும் இல்லை. இக்கோவில் புராணகாலத் தொடர்புடையது என்பதால் இதனைப் புராணஸ்தலம் என்றே கூறுகின்றனர். முடிகொண்டான் ஆறே தீர்த்தமாகக் கருதப்படுகிறது.

தமிழகத் திருத்தலங்களில் அருள் பாலிக்கும் ராமபிரானின் மூர்த்திகள் யாவும் உள்ளங்கொள்ளை கொள்ளும் அழகு வாய்ந்தவை என்பதை இத்தலத்துக் கோதண்டராமரும் நமக்கு உணர்த்துகிறார். இந்த ஊரில் உள்ள மற்றொரு வைணவத் திருக்கோவில் ஸ்ரீ வெங்கடாசலபதி ஆலயமாகும். இது ராமர் கோவிலுக்கு எதிர்புறமுள்ள தெருவில் இருக்கின்றது. இவ்விரண்டு கோவில்களும் ஒரே பட்டாசாரியரால் கவனிக்கப்பட்டு வருகின்றன.