சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையின் மூலம் குணமடைந்த சிலருக்கு மியூகோர்மைகோசிஸ் (Mucormycosis) எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவது கண்டறியப்பட்டு வருகிறது. இவை இந்த நோய்க்கு நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களை அதிகம் பாதிக்கப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழலில் உள்ள பூஞ்சை வாயிலாக இந்த கருப்பு பூஞ்சை மனிதர்களுக்கு எளிதாக பரவுகிறது. வெட்டு, தீக்காயங்கள் வாயிலாக தோலில் நுழையும் இந்த பூஞ்சை, பின் தோலின் மீது மேலும் பரவுகிறது.
கருப்பு பூஞ்சை மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கத் தேவையான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயை ராஜஸ்தான் அரசு பெருந்தொற்றாக அறிவித்துள்ளது.
இந்த நோய் கொரோனா தொற்றுடன் இருக்கும் போதும் அல்லது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த பின்பும் தாக்கக்கூடியது. இந்த நோய் தாக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தலைவலி, கண்களில் வீக்கம், கண்கள் சிவப்பு நிறமாக மாறுதல், திடீரென பார்வை குறைதல், சைனஸ் பிரச்சினை, மூக்கில் வலி, வாய் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கருப்பாக மாறுதல் போன்றவை, இதற்கு அறிகுறிகளாக கூறப்படுகிறது.
தற்போது தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நோய்க்கு தூத்துக்குடியில் ஒருவர் மரணம் அடைந்த நிலையில், இது பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நோய் தொடர்பாக சென்னையில் 5 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என்று தெரிவித்தார். இந்நோய் குறித்து ஆய்வு செய்ய மருத்துவ வல்லுநர்கள் குழுவை தமிழக அரசு நியமித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.