டில்லி:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டு 84 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் முதல்கட்டமாக 42 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா கடந்த 20-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.
இளையராஜா, பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் உள்பட 42 பேர் விருது பெற்றனர். மீதமுள்ள 42 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். ஸ்நூக்கர் விளையாட்டு வீரர் பங்கஜ் அத்வானிக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
உலககோப்பையை வென்ற 7 ஆண்டுகள் கழித்து அணியை வழிநடத்திய இந்திய கிரிக்கெட் அணி வீரர் டோனிக்கு விருது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.