டில்லி:

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க கூடாது என்று மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது தேவையற்றது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். இதை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக கூறவில்லை. ஆதாரும், வாக்காளர் அடையாள அட்டையும் வெவ்வேறு தளங்களில் பயன்படுத்தக் கூடியதாகும்.

வாக்களிக்க செல்லும் போது ஆதார் அட்டையை காண்பித்தால் வாக்களிக்க அனுமதிக்கமாட்டார்கள். வாக்களிக்க வாக்காளர் அட்டை தான் வேண்டும். அனைத்தையும் ஆதாருடன் இணைத்தால் செயல்பாடுகள் அனைத்தையும் மோடி கண்காணிப்பதாக ஆதார் எதிர்ப்பாளர்கள் கூறுவார்கள். எனக்கு இது தேவையில்லை’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘வாக்காளர் அடையாள அட்டை தேர்தல் ஆணைய இணையதளத்துடன் தொடர்பு கொண்டது. வாக்குச்சாவடி தகவல் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ள இது உதவுகிறது. இதற்கும் ஆதாருக்கும் தொடர்பு இல்லை. வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது வெளிப்படை தன்மையை அதிகரிக்கும். நேரடி மானிய திட்டம் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

மன்மோகன் சிங் ஆதாருக்கும், மோடியின் ஆதாருக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. மன்மோகன் ஆதாருக்கு சட்ட உதவி இல்லை. ஆனால் மோடி ஆதாருக்கு பின்னால் சட்டம், பாதுகாப்பு, ரகசியம் காப்பு, முழு உத்தரவாதம் ஆகியவை உள்ளது. 80 கோடி செல்போன் எண்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. 120 கோடி செல்போன் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.