தமிழக அரசியலில், திராவிடக்கட்சிகளான திமுகவும், அதிமுகவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். இரு கட்சிகளைப் போலவே, கட்சித் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பரம விரோதிகளாக இருந்து வந்தனர்.

கடந்த 2010ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்றபிரம்மாண்டமான அதிமுக பொதுக்கூட்டத்தில், அப்போது அதிமுக பொதுச்செயலாளராக இருந்த  ஜெயலலிதா, ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.

கருணாநிதியை திருக்குவளை தீயசக்தி என்று புதிய பட்டப்பெயர் சூட்டி அழைத்தார். அதைத்தொடர்ந்து,  ஜெயலலிதா மறையும் வரை, கருணாநிதியை தீயசக்தி என்றே அழைத்து வந்தார். அதிமுக தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் கருணாநிதியை தீய சக்தி என்றே அழைத்து வந்தனர்.

ஆனால், கடந்த 2016ஆம் ஆண்டில் ஜெயலலிதா. வெற்றி பெற்ற பின்னர், ஜெயலலிதாவின் அணுகுமுறையும், எதிர்கட்சியினருடன் பேசும் முறையும் சற்றே மாறியது.

அதுவரை தீயசக்தி என்று அழைத்து வந்த கலைஞரை திரு. கருணாநிதி என்று சட்டசபையில் பேசத் தொடங்கினார் ஜெயலலிதா. இந்த அதிசயம் அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களியே வியப்பை ஏற்படுத்தியது.

அதையடுத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் மரணமடைந்தார். இதுதான் கலைஞர் கருணாநிதியை, ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வில் முதன்முறையாக மரியாதையாக அழைத்தது என்று கூறப்படுகிறது.

ஜெ.  இருந்த போது திமுக பொருளாளர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்தார். அதுமட்டுமின்றி ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியும் இரங்கல் செய்தி வெளியிட்டார்.

தமிழக அரசியலில் இந்த நிகழ்வுகள் பெரும் வியப்பை ஏற்படுத்தின. மிகப்பெரிய மாற்றமாக பேசப்பட்டது.

அதுபோல, கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்டு, காவேரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அதிமுக மூத்த தலைவரான   தம்பிதுரை மற்றும் தற்போதைய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம்போது, சின்னம்மாவின் வழிகாட்டுதல் படி, அவரது சார்பிலும், அதிமுக சார்பிலும் இங்கு வந்து திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரித்தோம். அவர் நலமாக இருக்கிறார். இது மகிழ்ச்சியான செய்தி. அவர் விரைவில் வீடு திரும்ப வாழ்த்துக்கள் என்றார்.

பல ஆண்டு காலமாக தீயசக்தி என்று கலைஞரை விளித்து பேசி வந்த ஜெயலலிதா, திடீரென திரு.கருணாநிதி என்று குறிப்பிட்டதும், அதிமுக தலைவர்கள் கலைஞர் கருணாநிதி என்று அழைத்ததும் தமிழக அரசியலில்  நடந்த அதிசயம்தானே…

திமுகவின் முதுபெரும் தலைவரான மறைந்த மு. கருணாநிதியை, திமுக தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கலைஞர் என்றுதான் அழைப்பார்கள். அது அவருக்காக புனைப்பெயர் மட்டுமல்ல அவருக்கு அளிக்கும் மரியாதை என்பது குறிப்பிடத்தக்கது.