பண்டல்காந்த், மத்தியப் பிரதேசம்
நிவாரணம் கேட்டு போராடிய விவசாயிகளை உடைகளை அவிழ்த்து உள்ளாடையுடன் காவல் நிலையத்தில் மத்திய பிரதேச போலீசார் அமர வைத்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் மிகவும் வரண்ட பிரதேசங்களில் பண்டல்காந்த் பகுதியும் ஒன்றாகும். சிலநாட்களுக்கு முன்பு தங்களின் கடனை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு அதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இன்னும் விவசாயிகளுக்கு எந்த ஒரு நிவாரணமும் வழங்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியாளரை சந்திக்க வேண்டி போரட்டம் நடத்தினர். ஆனால் ஆட்சியாளர் அவர்களை சந்திக்கவில்லை.
மேலும் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆட்சியாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தி உள்ளனர். போலீசார் அவர்களை கலைந்து போகச் சொல்லியும் கேட்காததால் அவர்களை தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் கலைத்துள்ளனர். இந்த விவரம் உள்ளூர் காங்கிரஸ் பிரமுகரான யத்வேந்திர சிங் இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உடனடியாக காவல் நிலையத்துக்கு விரைந்துள்ளார்.
அங்கு சுமார் 25-30 விவசாயிகள் பிடித்து வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் உடைகள் அவிழ்க்கப்பட்டு உள்ளாடைகளுட்ன அம்ர்த்தி வைக்கப்பட்டிருந்தனர். மேலும் அவர்கள் சரமாரியாக போலீசாரால் அடிக்கப் பட்டுள்ளனர். இதைக் கண்ட யத்வேந்திர சிங் இது குறித்து உடனடியாக மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அந்த விவசாயிகள் அதற்குப் பின் விடுவிக்கப்பட்டுளனர்.
விவசாயிகள் உள்ளாடையுடன் காவல் நிலையத்தில் இருந்த புகைப்படத்தை யத்வேந்திர சிங் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து மத்திய பிரதேச போலீஸ் சூப்பிரண்ட் அதிகார் குமார் ப்ரதீக், “போராட்டக்காரர்கள் கற்களால் போலீசை தாக்கினர். அதனால் தான் அவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியது. எட்டு போலீசார் கல்வீச்சில் காயம் அடைந்துள்ளனர். மற்றபடி விவசாயிகளின் ஆடையை அவிழ்த்ததாக எனக்கு எதுவும் தகவல் வரவில்லை” என கூறினார்.
இது குறித்து விசாரணை ஏதும் நடத்தப்படுமா என கேட்டதற்கு குமார் பதிலளிக்கவில்லை.