விருதுநகர்:
கிராம பொருளாதாரம் பாதிக்காமல் இருக்க முழு ஊரடங்கு நேரத்திலும் பாதுகாப்புடன் 100 நாள் வேலை வழங்கிய மத்திய, மாநில அரசுகளைப் பாராட்டுகிறேன் என விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
விருதுநகர் அருகே சிவஞானபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வு செய்தார்.
பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பணியாளர்களைப் பரிசோதிக்க உதவும் மருத்துவ உபகரணங்கள், முகக்கவசம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி தானும் பரிசோதனை செய்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர் கூறியதாவது:
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் காக்க முழு ஊரடங்கு காலத்திலும் 100 நாள் வேலை நடைபெறுவது பாராட்டுக்குரியது.
இதன் மூலம் கிராம பொருளாதாரம் பாதிக்காமல் இருக்கும் என்றார். அதேவேளைக் கிராமங்களில் கொரோனா தொற்று பரவாமல் இருக்கப் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். 100 நாள் பணியாளர்களுக்குக் கண்டிப்பாகப் பரிசோதனைகளை மேற்கொண்டு தாய்மார்களைக் காக்க வசதியாக அதற்கான உபகரணங்களை பணித்தள பொறுப்பாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்.
தடுப்பூசியைப் பற்றிப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான், பிரதமர், முதல்வர் என அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளோம். கிராமப்புற மக்களும் தடுப்பூசி போட முன்வர வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் எவ்வித விளைவுகளும் இல்லை. இதற்கிடையே பிரதமர் தமிழகத்தை வஞ்சிக்காமல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கேட்டுக்கொண்ட 14 கோடி தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.