குவாலியர்
இந்திய உணவுப் பொருள் கழக காவலர் தேர்வு வினாத்தாள் வெளியானது கண்டு பிடிக்கப்பட்டு விடைத்தாளை தயார் செய்துக் கொண்டிருந்த இருவரும் 48 தேர்வாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய உணவுப் பொருள் கழகத்தில் காவலர் பதவிக்கு நேற்று தேர்வு நடைபெற்றது. மாநிலம் எங்கும் 132 மையத்தில் இந்த தேர்வு நடைபெற்றது. மொத்தம் 217 காலி இடங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வின் குவாலியர் மையம் பகுதியில் தேர்வு நடைபெறுவதற்கு சுமார் 90 நிமிடங்கள் முன்பு கேள்வித்தாள் வெளியானது கண்டு பிடிக்கப்பட்டது.
உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய காவல் துறையினர், குவாலியர் ஓட்டல் ஒன்றில் 48 தேர்வாளர்களும் 2 தரகர்களும் பிடிபட்டனர். அப்போது அந்தத் தேர்வாளர்களுக்கான விடைத்தாட்களை அந்த தரகர்கள் தயார் செய்துக் கொண்டிருந்தனர். காவல்துறையினர் அவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
விசாரணையில் அவர்கள் பீகார் அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தேர்வாளர்கள் என கண்டறியப்பட்டது. தரகர்களான ஹரிஷ் குமார் மற்றும் அசுதோஷ் குமார் ஆகியோர் இதற்காக அவர்களிடம் இருந்து தலா ரூ.5 லட்சம் வசூலிக்க இருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் பலர் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்னும் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.