தந்தையை இழந்து நிற்கும் மகன், தங்கைக்கு அப்பாவாக துணை நிற்க, ஒட்டுமொத்த குடும்பத்தினர் மீதும் பாசம் வைத்து, அந்த பாசத்தை குடும்பத்தினர் அவர் மீது வைக்காத நிலையில், ஒரு குடும்ப பாசக் கதையாக அமைந்திருக்கிறது நம்ம வீட்டு பிள்ளை.
எதுக்கெடுத்தாலும் புகார் கொடுக்கும் அண்ணனாக சூரி, சூரிக்கு ஏற்ற தம்பியாக சிவகார்த்திகேயன். வேல ராமமூர்த்தி, சுப்பு பஞ்சு, சண்முகராஜன், சமுத்திரகணி என ஒரு குடும்பம் இருக்க, அக்குடும்பத்திற்கு மூத்தவராக இமையம் பாரதிராஜா அவர்கள் இருக்கிறார். தன் மகளை கட்டிக்கொடுத்த மாப்பிள்ளையிடம், சரக்கு அடிக்க பணம் கேட்கும் மாமா, சரக்கு அடித்த கணவனை தேடி சுற்றித் திறியும் மனைவி என்று துவக்கமே வேறு மாதிரியாக இருந்தாலும் கூட, தங்கை பாசத்தின் பாசமலர் காம்போவுக்கு கதை திரும்புகிறது.
அனு இமானுவேல் எதற்காக கதையில் சேர்க்கப்பட்டார் ? என்கிற கேள்வி மட்டும் தான் எனக்குள் இன்னுமும் இருக்கிறது. தேவையில்லாத இடத்தில் ரொமான்டிக் பாடல், மாங்கணியை மாங்கா திங்க வைப்பேன் என்று சபதம் ஏற்று செல்லும் சிவகார்த்திகேயன் என்று முதல் பகுதி ஒரு குழப்பத்துடனேயே செல்கிறது.
தங்கை வயதுக்கு வந்த பின்னர், ஒரு அண்ணன் செய்ய நினைப்பது எல்லாம் தங்கையின் திருமணம் தான். திருமணத்திற்கு ஏற்பாடு செய்தாலும், அதை வேல ராமமூர்த்தி தடுக்க, இதை சரி செய்வதற்காக வயதுக்கு வந்த பெண்ணுக்கு தண்ணீர் ஊற்றி திருஷ்டி கழிப்பது போல காட்சிகள் எல்லாம் இடம்பெற்றிருக்கிறது.
காந்தக்கண்ணழகி பாடல் எதற்காக படத்தில் இருக்கிறது ? என்கிற கேள்வி இதற்கடுத்ததாக எழுகிறது. சூரிக்கு மகனாக நடிக்கும் பாண்டிராஜின் மகன், சூரிக்கு ஏற்றது போலவே டைமிங் காமெடி போன்றவைகளும், வழக்கம் போல சிவகார்த்திகேயன் – சூரி காம்போவும் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் என்று தான் சொல்லவேண்டும்.
தங்கையின் திருமணத்தை மீண்டும் நடத்த போராடும்போது, சூரியின் புகார் மற்றும் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கால் சொத்துக்களை இழந்த குடும்பத்தை சேர்ந்தவராக தன்னை காட்டிக்கொள்ளும் நட்டி, ஐஷ்வர்யா ராஜேஷ் என்கிற துளசியை திருமணம் செய்ய முன்வருகிறார். அண்ணனுக்கு கூடுதல் சுமையாக இருப்பது தனக்கே பிடிக்காத நிலையில், சரிவராத திருமணம் என்றாலும், அதை செய்ய ஒப்புக்கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவற்றுக்கு இடையில் வழக்கறிஞராக வலம் வரும் யோகி பாபு, நீதிமன்ற வாதங்களை சொல்வது தியேட்டரில் சிரிப்பலையை அதிர வைக்கிறது.
வீட்டுக்கு விருந்து வைக்க அழைத்தால் வருவதில்லை, கிரஹபிரவேசத்திற்கு வருவதை எதிர்ப்பது என்று ஒட்டுமொத்தமாக நெகடிவ் ரோலில் காட்டப்பட்டிருந்தார் நட்டி. ஒரு கட்டத்தில், திருமணமாகி, கர்பமான தன் தங்கை துளசியை, நட்டி அடித்துவிட்டார் என்பதற்காக ஒயின் ஷாப்பில் வைத்து வெளுக்கும் சிவகார்த்திகேயனால், கோபத்தில் இருந்த நட்டி, சமாதானம் பேச வந்த தன் நண்பரையே எதிர்பாராத விதமாக பாட்டிலால் அடித்து கொலை செய்ய, கடைசியில் நட்டியை கொலை செய்ய அவரின் நண்பரின் உறவினர்கள் முற்படுகின்றனர்.
இவர்களிடமிருந்து நட்டி தப்பிக்கிறாரா ?, சிவகார்த்திகேயனின் குடும்பத்தினர் தங்களின் தவறுகளை உணர்கிறார்களா ? என்பது தான் மீதம் உள்ள கதை.
என்ன தான் தன் அப்பா இறந்தாலும், பெரியப்பா, சித்தப்பா என்று கூப்பிட வேண்டியவர்களை கூட நான் அப்பா என்று தான் அழைக்கிறேன். நீங்க முன்னாடி போங்க, நாங்க உங்க பின்னாடியே அப்படியே ஒரு ஓரமா வாரோம் என்று சிவகார்த்திகேயன் பேசும் அந்த ஒரு வசனம் மட்டும் கண்ணில் கண்ணீரை வரவழைக்கிறது.
பாசமலர் பகுதி 2 எடுத்தால் எப்படி இருக்குமோ, அதை இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றார் போல மாற்றி எடுத்திருக்கிறார் பாண்டிராஜ். நட்புக்கு ஆர்.கே சுரேஷ், காமெடிக்கு சூரியும், தன் மகனும் ஒரு காம்போ, யோகி பாபு சோலோ என்று ஒரு காமெடி பட்டாளத்தை களமிறக்கியதும் வீண்போகவில்லை.
நீ வைத்தியம் பாக்குற காசுல நாங்க பிழைக்கல, பிடிச்சா இரு. இல்லைன்னா அவன் கூடவே கிளம்பு என்று வேலராமமூர்த்தி சொன்ன உடன், கோபத்தில் அங்கிருந்து கிளம்பும் பாரதிராஜாவின் நடிப்பும், இரு இரு ஒரு நாள் உன்னையும் இப்படி வெளியே துரத்துறேன் என்று கவுன்டர் கொடுக்கும் பாண்டிராஜ் மகனின் நடிப்பும் பாராட்டுக்குறியது.
சைரன் வெச்ச கார்ல வரணும்னு சொன்ன அனு இமானுவேல், கலெக்டராக ஆனாங்களா ? என்கிற கேள்விக்கு விடையே இல்லை. சிறைக்கு சென்ற நட்டி, திருந்தினாரா ? என்கிற கேள்விக்கு விடையே இல்லை. 5 நிமிட க்ளைமாக்ஸ் முடிவதற்குள், ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்தது எப்படி ? என்பதற்கும் விடையே இல்லை.
சொந்தத்துக்கிட்டயே தோத்துப்போகணும்னு நினைக்குறவனே, யாராலயும் ஜெயிக்க முடியாது, நல்லது செஞ்சாலே அரசியலுக்கு வர்றீங்களான்னு கேட்குறாங்க, அதனால தான் பாதி பேரு நல்லதே செய்ய முன்வர்றதில்லை, சொந்தம் மாதிரி யாரும் சந்தோஷப்படுத்தவும் முடியாது. அதே சொந்தம் மாதிரி யாரும் கஷ்டப்படுத்தவும் முடியாது என்று அடுக்கடுக்கான வசனங்கள் அருமையாக இருக்கிறது.
படத்தின் துவக்கத்தில் வரும் எங்க அண்ணன் பாடலை விட, உன் கூடவே நான் இருக்கனும் என்கிற பாடல் தான் மனதை தொடும் அளவிற்கு இருக்கிறது.
மொத்தத்தில், படத்தில் ஒருசில குறைகள் இருந்தாலும் கூட, பாசத்தையும், காமெடியையும் வைத்து கதையை, எவ்வித சலிப்பும் ஏற்படாத வகையில் கொண்டு சென்றதற்காக பாராட்டலாம்.