மணப்பாறை:
மணப்பாறையை அடுத்த புதுப்பட்டி மலைப்பட்டியை சேர்ந்தவர், ரவி செல்வகுமார் (வயது 27) கூலி தொழிலாளி. 2 குழந்தைகளுக்கு தகப்பனார்.
இவர் கடந்த 6 மாதமாக கடும் முதுகுவலியால் அவதிப்பட்டார். இதன் காரணமாக அவரது வலது கால் பலவினம் அடைந்தது. இதுகுறித்து தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். பரிசோதனையில் முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு 80000 பணம் செலவாகும் என்றனர்.
இதனால் செல்வகுமார் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றார். அவர்கள் பரிசோதனை செய்துவிட்டு 8 மாதம் கழித்து வரச்சொல்லி திருப்பி அனுப்பிவிட்டனர்.
அதிக முதுகு வலியாலும், வலது கால் அதிக பலவீனமானதாலும் சோர்வடைந்த செல்வகுமார், மணப்பாறை அரசு மருத்துவமனையின் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜான்விஸ்வநாத்-தை சந்தித்தார். அவர் பரிசோதனை செய்துவிட்டு, நோய் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார். அறுவை சிகிச்சை முடிவு எப்படி இருக்குமோ தெரியவில்லை. கடவுளின் கிருபை இருந்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று அவரின் உறவினர்களிடம் கூறிவிட்டு அறுவை சிகிச்சைக்கா ஏற்பாடுகளை கவனித்தார்.
மிகவும் அபாயகரமான இந்த அறுவை சிகிச்சை மூலம் அவரின் தண்டுவடத்தின் நரம்பு மண்டலத்தில் இருந்த கட்டி அகற்றப்பட்டது.
குறிப்பாக, முதுகு தண்டில் உள்ள எல்-4, எல்-5 நரம்பு பாதையில் இருந்த கட்டி முழுமையாக வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இந்த நரம்புகள்தான் உடலின் அனைத்து பகுதிகளையும் கட்டுப்படுத்தும் தன்மை உடையது.
இந்த அறுவை சிகிச்சை காலை 8 மணிக்கு ஆரம்பித்து 11 மணி வரை சுமார் 3 மணி நேரம் நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பெரிதும் உதவியாக இருந்தவர் மயக்க மருந்து டாக்டர் மலைதுரை ஆவார்.
அறுவை சிகிச்சை முடிந்து தற்போது செல்வகுமார் நலமுடன் இருக்கிறார். இன்னும் ஓரிரு நாளில் நடக்க ஆரம்பிம்பார் என்று டாக்டர் கூறினார்.
மிக சிக்கலான் இந்த அறுவை சிகிச்சையை ஜான் விஸ்வநாதன் உட்பட மருத்துவர் குழு மணப்பாறை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக நடத்தி சாதனை புரிந்துள்ளது.