புதுடெல்லி:
ட்ஜெட் கூட்டத்தொடர் 31ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 4 முதல் 8 ஆம் தேதி வரை 1,409 ஊழியர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 402 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து அவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் தொற்று பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாதிக்கப்பட்ட 875 ஊழியர்களுடன் தொடர்பு கொண்ட பல ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் பாராளுமன்றத்திற்கு வெளியே பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. பாராளுமன்ற ஊழியர்கள் அனைவரும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த பல்வேறு அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத பணியாளர்களுக்கு கீழ் இயங்க வேண்டும் என்றும், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு தனது ஊழியர்களின் வருகைக்கான பயோமெட்ரிக் பதிவில் இருந்து விலக்கு அளித்துள்ளது.