சென்னை: அறநிலையத்துறையில் 5ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கொரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டால், தமிழகத்தின் 27 மாவட்டங்களில் கோவில்களை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர்,செய்தியாளர்களை சந்தித்தவர், இந்து சமய அறநிலையத் துறையில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக கோயில் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான 4 கோடி பக்கம் உள்ள ஆவணங்களை தற்போது டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று, கோயில் நிலங்களில் வாடகைக்கு இருப்பவர்களின் விவரங்கள், கோயில்களின் வரவு, செலவு கணக்குகள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் வெளியிடப்படும் என்றவர்,
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கடந்த ஆட்சி காலத்தில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். அவ்வாறு உண்மையிலேயே மீட்கப்பட்டு இருந்தால் அவற்றின் பட்டியலை வெளியிட வேண்டும் என கூறினார்.
தற்போது நடைபெற்று வரும், திமுக ஆட்சியில் கோயில் நிலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி,கடந்த 55 நாட்களில் கோயில்களுக்கு சொந்தமான ரூ.520 கோடி மதிப்புள்ள 79.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.