டில்லி

டில்லியில் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினரிடையே மோதலை தவிர்க்க இரு கட்சியைச் சேர்ந்த 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. 

அண்மையில் சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வாக்குச்சீட்டில் தேர்தல் அதிகாரி எதையோ எழுதுவது போன்ற வீடியோ காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. சண்டிகர் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

மேயர் தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றதாகக் கூறி பா.ஜ.க.வை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் டில்லியில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போடாட்டத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து ஆம் ஆத்மி தொண்டர்கள் பா.ஜ.க. அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்லத் தொடங்கினர். டில்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசாங்கத்தில் ஊழல் நடைபெறுவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தொண்டர்கள், ஆம் ஆத்மி அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர்.

டில்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் சதுக்கத்தை நோக்கி இரு கட்சிகளின் தொண்டர்களும் பேரணியாகச் செல்ல முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மோதலை தவிர்க்க காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து இரு கட்சிகளின் தொண்டர்களையும் தடுத்தனர். அங்கு கலவரம் ஏற்படாமல் தடுக்க சுமார் 1,000 காவலர் குவிக்கப்பட்டனர்.

காவல்துறையினர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 150 பேர் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த 60 பேரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்  .டில்லி முதல்வர் மற்றும் பஞ்சாப் முதல்வர் ஆகியோர் பேரணி தொடங்குவதற்கு முன்பு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். ஆனால் அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடர கட்சி தொண்டர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தியிருந்தனர் எனக் கூறப்படுகிறது.