திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது அதிகனமழை பெய்து வருகிறது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சியில் வசிக்கும் மக்களை பெருமளவு பாதித்துள்ளது.

நெல்லை மணிமுத்தாறு அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நெல்லை நகரின் முக்கிய வீதிகள் முழுவதுமாக மூழ்கிப்போயுள்ளது.

நெல்லை மத்திய பேருந்து நிலையம் அருகே சுமார் 10 முதல் 14 அடி தண்ணீர் தேங்கியுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த வரலாறு காணாத மழையால் இந்த மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில் இங்கு மேலும் அதிகனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மக்கள் அனைவரும் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.