டெல்லி: குஜராத் பாலம் இடிந்து விழுந்தது கடவுளின் செயல் அல்ல மாநிலத்தை ஆளும் பாஜகவின்  மோசடி செயல் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் கடுமையாக சாடியுள்ளார். இந்த கயிறு பாலம் இடிந்து விழுந்ததில் 68 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு என்ற ஆற்றை கடக்க கேபிள் (கயிற்றினால் ஆன தொங்கு பாலம்) பாலம் உள்ளது. இது  பழமை வாய்ந்தது. இந்த பாலம் கடந்த 6 மாதங்களாக பழுது பார்க்கப்பட்டு கடந்த வாரம் மீண்டும் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுது. இந்த நிலையில், நேற்று மாலை இந்த கேபிள் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 68 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த 2016 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் சாலை மேம்பாலம் இடிந்து விழுந்து பலர் உயிரிழந்ததற்கு மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசு குறித்து பிரதமர் மோடி குறை கூறியிருந்தார். தற்போது மோர்பி பால விபத்து கடவுளின் செயலா அல்லது மோசடி செயலா? என பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்.

27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கும் குஜராத்தில், கடந்த ஆறு மாதங்களாக மோர்பி பாலம் பழுது பார்க்கப்பட்டது, ஆனால் திறக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு இடிந்து விழுந்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பித்ரா கிராமத்தில் முதல் நாள் சோதனையின் போதே நர்மதா கால்வாய் உடைந்து விழுந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.