சென்னை: 
மிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள், பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் என 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருக்கின்றது. தேர்தல் நடத்தப்படாததால் இந்த மாவட்டங்களின் ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் முடங்கிப்போய் உள்ளன. இந்த தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும் எனப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு உறுதி அளித்தது.
செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இன்னும் பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கூடுதல் அவகாசம் கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளது.
இது தொடர்பாக 6-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே, வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, கடந்த 31ம் தேதி, தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்கள் மற்றும் தேர்தல் முடிந்து காலியாக இருக்கக் கூடிய ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகத் திங்களன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வாக்காளர்கள், வாக்குச்சாவடிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் வாகனங்களில் பின்பற்றக்கூடிய நடத்தை விதிகள் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் குறிப்பாக மறைந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டிய அவசியமில்லை என்றும், கட்சித் தலைவர்களின் படங்களை வெளிப்படையாக வைக்க அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல், உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை 1.5 மணி நேரம் நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது. காலை 7 முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே வழக்கமாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நேரம், தற்போது காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கவும், கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்தவும் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படுவதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.