நாமக்கல்: வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வது தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின்  உத்தரவின் பேரில், வருமான வரித்துறை நாமக்கல், கோவை உள்பட பல பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில்,  நாமக்கல் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த சந்திரகேரன் என்பவர் வீட்டில் இருந்து  4.8 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதுபோல கோவையில் பிரபல தனியார் மருத்துவமனையில்  நடைபெற்ற சோதனையில் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,  ஆங்காங்கே வாக்காளர்களுக்கு வாக்குகளை பெறும் நோக்கில் இலவசங்களும், பரிசுப் பொருட்களும், பணப்பட்டுவாடாக்களும் நடைபெறுவதாக புகார்கள் வருகின்றன.

இந்த நிலையில்,  வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் வருமான வரித்துறையினருக்கு அறிவுறுத்திய நிலையில்,  வருமான வரித்துறையினர், நாமக்கல், ஈரோடு, சேலம், கோவைமாவட்டத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையைச் ட அதிகாரிகள்  பல இடங்களில்  சோதனை மேற்கொண்டனர்.

அதன்படி, நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வரும் தனியார் பேருந்து உரிமையாளர் சந்திரசேகர் என்பவர்   வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது.  இந்த சோதனையில்  அங்கு கணக்கில் வராத ஏராளமான பணம் கட்டுக் கட்டாக இருந்தது பெரிய வந்தது. அதையடுத்து பணம் எண்ணும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த பணம் எண்ணப்பட்டது சோதனை முடிவில் 4.8 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் நாமக்கள் எஸ்பிஐ வங்கியில் ஒப்படைத்துள்ளனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சந்திரசேகரனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நள்ளிரவு வரை சுமார் ஒன்பது மணி நேரம் நடைபெற்ற சோதனையில் 4.80 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து அதிபர், சந்திரசேகர் பிரபல அரசியல் கட்சிக்கு நெருக்கமானவர் என கூறப்படும் நிலையில் இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா என அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதே போல சென்னையில் நேற்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 2.5 கோடி ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் அந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அது தனியார் கல்லூரியின் பணம் என்று தெரிய வந்துள்ள நிலையில் அதுவும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணம் தான் என்று விசாரணையில் தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அந்த கல்லூரியின் மீதும் வருமான வரித்துறையினர் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளனர்.

அதுபோல, கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள முத்தூஸ் மருத்துவமனையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் பொழுது சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று  பிற்பகல் அந்த மருத்துவமனைக்கு சென்ற  வருமானவரித்துறை அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முதலில் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கு சிறிது நேரம் சோதனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து கிளம்பி சரவணம்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகளில் 5 பேர் கொண்ட குழுவினர் அலுவலகத்தில் சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது சில ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கேட்ட போது, பிற்பகல் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு வந்ததாகவும், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் சோதனை நடத்திய அவர்கள் ஒரு மணி நேரத்தில் கிளம்பி சென்று விட்டதாகவும் தெரிவித்தனர்.

முக்கிய அரசியல் கட்சியை சேர்ந்த  நபருக்கு நெருக்கமான இந்த மருத்துவமனையில், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணம் மருத்துவ மனையில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறையினரால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.