துரை

மோடியின் பாஜக அரசு மக்களுக்கான அரசு இல்லை எனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா கூறி உள்ளார்.

மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடந்தது.  இதில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா, மாநில செயலர் முத்தரசன், காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் அழகிரி, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலர் ஈஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த மாநாட்டில் டி ராஜா, ”இந்தியா அரசியலமைப்பு சட்டத்தின்படி மதச்சார்பற்ற நாடு என்பதால் இந்திய அரசு மக்கள் நல அரசாக இருக்க வேண்டும் ஆனால் மோடியின் பாஜக அரசு மத வெறியைத் தூண்டி இந்துத்வா அரசாக மட்டுமே உள்ளது.  இந்த அரசு மதச்சார்பின்மையைக் குழி தோண்டி புதைத்து விட்டது.   மோடியின் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக இருக்கிறதே தவிர மக்களுக்கான அரசாக இல்லை” என உரையாற்றி உள்ளார்.

முத்தரசன் தனது உரையில், “கடந்த மக்களவை தேர்தலுக்கு முன் கோவையில் கூட்டணிக் கட்சிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் மாநாடு நடத்தியது.  இதனால் தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் 40இல் 39 இடங்களில் வெற்றி  பெற்றோம்.  தற்போது அதிமுக கட்சியானது பாஜகவின் அதிகாரத்தை நம்பி களத்தில் உள்ளது.  மக்களுக்கு பிரியாணி, மது, ரூ.300 அளித்து அவர்கள் கூட்டம் நடத்துகின்றனர்.

கூட்டத்துக்கு வரும் யாரும் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.  மீண்டும் முதல்வராகலாம் எனக் கனவு காணும் பழனிச்சாமியின் சொந்த தொகுதி மற்றும் சொந்த ஊரில் கூட மக்களவை தேர்தலில் யாரும் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை.  இந்த தேர்தலிலும் அதே நிலை உண்டாகும். மக்கள் அனைவரும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்பின்மையை காக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.