டில்லி:

மோடி தலைமையிலான பாரதியஜனதா மத்திய அரசு அனைத்து வகையிலும்  தோற்றுவிட்டது என்றும், விரைவில் மோடி அரசுக்கு எதிராக மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் குற்றம் கூறி உள்ளார்.

நேற்று மும்பையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார், பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற் நாளில் இருந்து நாட்டில் ஊழல், பொருளாதார பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை அதிகரித்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

நாடு முழுவதும் ஏராளமான பிரச்சினைகள் தலைதூக்கி உள்ளன. நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு நிலை வெகு மோசமாகி வருகிறது என்றார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு நிறம் காவியாக மாற்றப்பட்டது பெரும் பிரச்சினையாக வெடித்ததை தொடர்ந்து, மீண்டும் நீல நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்றார்.

மோடி ஏற்கனவே அறிவித்தபடி வேலை வாய்ப்புகளை பெருக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய பவார், பொதுமக்கள்  தாங்கள் ஏற்கனவே செய்து வந்த  வேலைகளை இழந்து வருகின்றனர் என்றும் கூறினார்.

எனவே மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து வகையிலும் தோற்று விட்டது என்றும்,  மத்திய அரசை கண்டித்து மாநில அளவில் விரைவில் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு சரத் பவார் பேசினார்.