டில்லி,
பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு 8 மணிக்கு திடீரென, “இன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை இது. இந்த நோட்டுக்களை வங்கி, அஞ்சலகத்தில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்” என்று அறிவித்தார்.
அதிலிருந்து மக்கள் அல்லாட ஆரம்பித்தார்கள். 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாகிவிட்டதால் எந்த வணிக நிறுவனத்திலும் பொருட்கள் வாங்க முடியவில்லை.
பிரதமர் மோடியின் அறிவிப்பால் பாடி ஆனவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது…
பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுக்களை பெற மக்கள் கூட்டம் வங்கிகளில் அலைமோதுகிறது. வயதானவர்கள், பெண்கள் என பலரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் மக்கள் திண்டாடினர். இன்னும் திண்டாட்டம் தொடர்கிறது. இதற்கிடையே மக்கள் வங்கி, அஞ்சலகங்களை நோக்கி படையெடுத்தனர். போதிய நோட்டுகள் இல்லாதது ஒரு புறம், பெரும் வரிசை இன்னொரு புறம்.
இந்த களேபாரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார்கள் மக்கள். இவர்களில் உயிரை விட்டவர்களும் உண்டு.
அந்த பட்டியல்தான் இது:
மகராஷ்டிரா: தனியார் மருத்துவமனையில், உடற்கோளாறுடன் பிறந்த குழந்தைக்கு, சிகிச்சை அளிக்க மறுத்தனர் மருத்தவர்கள். காரணம், பெற்றோரிடம் புதிய நோட்டுகள் இல்லை. விளைவு: குழந்தை உயிரிழந்தது.
அதே மகராஷ்டிராவில் வங்கியில் பணம் செலுத்த வரிசையில் நின்ற முதியவர் நெஞ்சுவலி காரணமாக மரணம்.
உத்தரபிரதேசம்: தன்னிடம் இருந்த இரண்டே இரண்டு 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று உடனிருந்தவர்கள் சொன்னாதால் அதிரச்சியில் மரணமடைந்தார் முதிய பெண்மணி. அவர் ஏழை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.‘
அதே உ.பியில் நவம்பர் 8-ந்தேதி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த தொழிலதிபர், இனிமேல் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பை பார்த்து அதிர்ச்சியாகி மாரடைப்பால் பலியானார்.
அதே உ.பியில் இன்னுமொரு சம்பவம். பழைய நோட்டை மருத்துவமனையில் வாங்க மறுத்து சிகிச்சை அளிக்க மறுத்ததால் ஒரு வயது குழந்தை இறந்தது.
ஆந்திரா: 18 மாத குழந்தைக்கு மருந்து வாங்க புதிய ரூபாய் நோட்டுகள் இல்லாத காரணத்தினால் மருந்து கடைக்காரர்கள் உரிய மருந்தை தர மறுக்க.. அக்குழந்தை இறந்தது.
தெலங்கானா: நிலம் விற்று வைத்திருந்த 54 லட்சம் ரூபாய் பணத்தை கணவரின் மருத்துவ செலவிற்காகவும், மகளின் திருமண செலவிற்காகவும் சேமிப்பாக வைத்திருந்த பெண்மணி ஒருவர், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கேட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பீகார்: மகளின் வரதட்சனைக்காக வைத்திருந்த 35,000 பழைய ரூபாய் நோட்டுகளை மணமகன் வீட்டார் வாங்குவார்களோ, மாட்டார்களோ என மனவேதனையில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் பலியானார்.
கேரளா: ஒரு மணி நேரமாக வங்கியில் புதிய பணம் பெற காத்திருந்த 75 வயது முதியவர் சுருண்டு விழுந்து இறந்தார்.
குஜராத்: வங்கியில் பணம் செலுத்த வரிசையில் நின்ற விவசாயி மாரடைப்பு காரணமாக பலி
கர்நாடகா: வங்கி திறப்பிற்காக நீண்ட வரிசையில் நின்றிருந்த 96 வயது முதியவர் அங்கேயே விழுந்து உயிரிழப்பு.
மத்தியப்பிரதேசம்: வங்கியில் புதிய பணம் பெற வரிசையில் காத்திருந்த 69 வயதானவர் உயிரிழந்தார்.
அங்கேயே இன்னொரு பலி.
ஸ்டேட் பாங்க் காசாளர் புதிய பணத்தினை மக்களுக்கு மாற்றிக்கொண்டிருந்த, அதீத வேலை பளு காரணமாக மாரடைப்பு காரணமாக பலி.
தமிழ்நாடு: கோவை பெரியநாயக்கன்பாளையம், சாரங்கன்காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்ற முதியவர் பணம் மாற்ற சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பணம் வாங்கியதும் சுருண்டு விழுந்து வங்கி வளாகத்திலேயே மரணம்.
இந்த மரணங்கள் இன்னும் தொடருமா…. இத்தோடு நின்றுவிடுமா………… யாரறிவார்……