புதுடெல்லி: மழைநீரை சேமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டுமென நாட்டின் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார் பிரதமர் மோடி.

அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, “இந்தியாவில் பருவமழை காலம் ஏறக்குறைய தொடங்கியுள்ளது. எனவே, புதிதாக நீர் சேமிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும் அல்லது ஏற்கனவே இருப்பவற்றை சரியாகப் பராமரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கடவுளின் புண்ணியத்தால் நமக்கு போதுமான அளவிற்கு மழைநீர் கிடைத்துள்ளது. அந்த இயற்கையின் கொடையை நாம் மதிக்க வேண்டும். அவற்றை சேமிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆறுகள் மற்றும் ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்தி, தூர்வாரி தயார்ப்படுத்த வேண்டும். குளங்களை சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இப்படியாக நாம் அதிகளவு தண்ணீரை சேமித்து வைத்துக்கொண்டால், அதன்மூலம் சிறப்பாக வேளாண்மை செய்வதோடு மட்டுமின்றி, பலவித தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கூட்டங்களை ஏற்பாடு செய்து, தனது கடிதத்தை மக்களுக்கு படித்துக் காட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் மோடி.