சென்னை: வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுகிற முடிவு ஒரு சந்தர்ப்பவாத நடவடிக்கை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
இந்த வேளாண் சட்டம் ரத்து குறித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது,
‘விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில், மூன்று வேளாண் சட்டங்களை கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் பா.ஜ.க. நிறை வேற்றியது. இதை எதிர்த்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கடுமையாகக் குரல் கொடுத்தார்கள். விவசாயிகளையோ, விவசாய சங்கங்களையோ கலந்தாலோசிக்காமல் விவசாயிகள் குறித்து சட்டம் இயற்றுவதற்கு பா.ஜ.க.விற்கு எந்த உரிமையும் இல்லை என்று அகில இந்திய விவசாயிகள் அமைப்பு கடுமையான போராட்டத்தை தொடங்கியது. கடும் குளிர், மழை, வெயில் என்று பாராமல் கடந்த ஓராண்டாக விவசாயிகள் தலைநகர் தில்லியில் போராடினார்கள். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தக் கூட பிரதமர் மோடி தயாராக இல்லை.