டில்லி

வரும் 26 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு அளிக்க உள்ளார்.

பிரதமர் மோடி கடந்த ஜனவரி 12ஆம் தேதி மதுரையில் பொங்கல் விழாவில் பங்கேற்க இருந்தாக கூறப்பட்டது.  மேலும் அவர் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க வருகை தருவதாகவும் கூறப்பட்டது..  ஆனால் கொரோனா பரவல் காரணமாக மோடியின் தமிழகம், புதுச்சேரி பயணமும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்கத் தமிழகம் வருகிறார்.  மேலும் தெற்கு ரயில்வேயின் புதிய திட்டங்களையும் பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் திறந்து வைக்கவுள்ளதாகத் தெரிகிறது.  அது மட்டுமின்றி ரூ. 12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை வரும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது இலங்கைத் தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் முன் வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கும் திமுகவுக்கும், அடிக்கடி உரசல்கள் ஏற்பட்டு வரும் இந்நேரத்தில் பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.