டில்லி

ஜிஎஸ்டியில் சிறு வியாபாரிகளுக்கு உதவும் வகையில் திருத்தம் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்த வருடம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு கால கட்டத்தில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 5.7%ஆக வீழ்ச்சி அடந்தது.  இதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு என எதிர்க்கட்சியினரும் பா ஜ க வின் தலைவர்களான யஷ்வந்த் சின்ஹா போன்றவர்களும் குறை கூறி வருகின்றனர்.   டெல்லியில் நடைபெற்ற நிறுவன செயலாளர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி இதற்கு பதில் அளித்துள்ளார்.

அந்தக் கூட்டத்தில் மோடி, “இந்த அரசு தற்போது நாட்டின் வளர்ச்சி சிறிது மந்த நிலையில் இருப்பதை நன்கு அறிந்துள்ளது.   அதை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.   கடந்த 3 மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7%ஆக குறைந்ததை குறிப்பிட்டு சிலர் விமர்சிக்கின்றனர்.  நாட்டின் அழிவுக்கு இது ஒரு அறிகுறி எனவும் சொல்கின்றனர்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பல முறை 5.7%க்கும் குறைவாகவே உள்நாட்டு உற்பத்தி இருந்து வந்துள்ளது.   நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் தான் இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சி உள்ள நாடாக மாறியது.   தற்போது பொருளாதாரம் உறுதியாக உள்ளது.  உள்நாட்டு உற்பத்தி குறைவை விமர்சித்தவர்கள் முந்தை ஆட்சியில் 10% ஆக இருந்த பணவீக்கத்தை நாங்கள் 2.5% ஆக மாற்றியதை கவனிக்கவில்லை.  இது மட்டுமின்றி நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்த ஆட்சியில் 4%லிருந்து 1% ஆகவும் நிதி பற்றாக்குறை 4.5%லிருந்து 3.5ஆகவும் குறைந்துள்ளது.

விரைவில் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியை சரி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும்.  தேவையற்ற சலுகைகள் கொடுத்து பாராட்டு பெறுவதை விட நீண்டகால நன்மைகளுக்கான சீர்திருத்தங்களை இந்த அரசு மேற்கொள்ளும்.   நிகழ்கால லாபத்துக்காக நாட்டின் எதிர்காலத்தை அபாயத்தில் நான் தள்ள மாட்டேன்.

சிறு வியாபாரிகளுக்கு உதவி செய்ய இந்த அரசு ஜி எஸ் டி யில் திருத்தம் செய்ய தயாராக உள்ளது.   அதற்கான ஆலோசனைகள் நடை பெற்று வருகின்றன.   இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் போலி நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது” என உரை ஆற்றினார்.