கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும் பாஜகவின் மத்திய அமைச்சருமான ஷோபா இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியபோது ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்கள் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டினார்.

மத்திய அமைச்சரின் இந்த பேச்சு பொறுப்பற்றது என்று விமர்சித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரிவினைவாத அரசியலை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், இதுபோன்று பேசுவதற்கு ஒன்று தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் அல்லது குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவராக இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பேச்சுக்களை தமிழர்களும், கன்னடர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ள மு.க. ஸ்டாலின், அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் முதல் தொண்டர் வரை, பாஜகவில் உள்ள அனைவரும் இந்த கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள ஸ்டாலின் இந்த வெறுப்புப் பேச்சை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.