டில்லி

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழஙக் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த சில தினங்களாகத் தொடர் கனமழை பெய்து வருகிறது.  இதில் இடுக்கி, கோழிக்கூடு ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

அத்துடன் தொடர் மழை காரணமாக இடுக்கி ராஜமாலா பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள தொழிலாளர் முகாமில் தங்கியிருந்த 80-க்கும் அதிகமான தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.  படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டு நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.