தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கப்பதிபு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் 13 கட்சிகள் கொண்ட மதச்சார்பற்ற கூட்டணி அமைந்துள்ளது. திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவுகோரி ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இன்று வெள்ளிக்கிழமை ஒரத்தநாடு, திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மாலை, திருப்பூர் தெற்கு, அவிநாசி, திருப்பூர். வடக்கு, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், சூலுர் பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார்.
இன்று காலை ஒரத்தநாடு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின்,
ஒரத்தநாடு தொகுதி – திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் உங்களால் எம்.ஆர். என்று அன்போடு அழைக்கப்படும் எம்.ராமச்சந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும்,
திருவிடைமருதூர் தொகுதி – கோவி. செழியன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும்,
கும்பகோணம் தொகுதி – அன்பழகன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும்,
திருவையாறு தொகுதி – துரை சந்திரசேகரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும்,
தஞ்சாவூர் தொகுதி – டி.கே.ஜி.நீலமேகம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும்,
பட்டுக்கோட்டை தொகுதி – அண்ணாதுரை அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும்,
பேராவூரணி தொகுதி – அசோக்குமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும்,
பாபநாசம் தொகுதி – மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் – நம்முடைய மதச்சார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும்
நீங்கள் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியைத் தேடி தர வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்வதற்காக வந்திருக்கிறேன்.
தலைவர் கலைஞர் பிறந்த மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். கோவிலில் பெரியகோவில் நம்முடைய தஞ்சை கோவில் தான். அணைகளில் சிறந்தது கல்லணை. தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை. தமிழரின் கோட்டையாக விளங்கி கொண்டிருப்பதும் தஞ்சைதான். எனவே அந்தக் கோட்டைக்கு நான் வந்திருக்கிறேன். தொடர்ந்து காவிரி பிரச்சினை குறித்து பேசிய ஸ்டாலின், காவிரி நடுவர் மன்றம் அமைக்க 1970-ல் இருந்து போராடி 1990 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் . அந்த நடுவர் மன்றத்திற்கு இடைக்காலத் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை பெற்றுத் தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர். 2007-இல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பெற்றுத் தந்தவரும் நம்முடைய தலைவர் கலைஞர்தான் என்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும், ஒவ்வொருமுறையும் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறபோதும், “சொன்னதைச் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்” என்பதைத் தலைப்புச் செய்தியாகச் சொல்வார் தலைவர் கலைஞர். எனவே அப்படிப்பட்ட தலைவருடைய மகனாக இருக்கும் ஸ்டாலினும் அதே அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறேன்.
ஏற்கனவே நாம் திருச்சியில் கடந்த 7ஆம் தேதி அன்று ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தினோம். அந்த கூட்டத்தில் பத்தாண்டு காலத்திற்கான ஒரு தொலைநோக்கு திட்டத்தில் 7 உறுதிமொழிகளை நான் வழங்கியிருக்கிறேன். அதை நிறைவேற்றுவேன். அதற்கு நான் பொறுப்பு என்று நான் கூறினேன்.
தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை திணித்து மதவெறியைத் தூண்டும் அவர்களுக்கு நான் சொல்வது இது பெரியார் – அண்ணா – கலைஞர் பிறந்த மண். பெரியாரும் – அண்ணாவும் – கலைஞரும் பண்படுத்திய மண்.
இங்கே உங்களுடைய மோடி மஸ்தான் வேலைகள் நிச்சயமாக எடுபடாது.
இந்தத் தேர்தல், ஏதோ நாம் ஆட்சிக்கு வருவதற்காக நடக்கும் தேர்தல் அல்ல. இது நம்முடைய சுய மரியாதையை காப்பாற்றுவதற்காக நடக்கும் தேர்தல் என்பதை மறந்து விடாதீர்கள். அதற்கு உதயசூரியன் சின்னத்திலும் – நம்முடைய கூட்டணி கட்சிகளின் சின்னங்களிலும் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தேடித் தர வேண்டும். அதற்கு உங்களது வாக்குகளை எல்லாம் மறந்து விடாமல் சிந்தாமல் சிதறாமல் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு அளித்து ஆதரவு தரவேண்டும்.
விவசாயிகளின் வாழ்க்கை செழிக்க வேண்டும் என்றால், மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றால். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றால், நாம் இழந்த உரிமைகளை மீட்க வேண்டும் என்றால், அடிமையாக இருக்கும் இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்றால், உதயசூரியன் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்களின் சின்னங்களுக்கு வாக்களியுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த மண் இந்த மண். அந்தத் தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்து நம்மையெல்லாம் விட்டு பிரிந்து அண்ணனுக்கு பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். நாம் பெறும் வெற்றியை அவருடைய நினைவிடத்துக்கு சென்று வெற்றி மாலையாக சூட்ட வேண்டும். அதுதான் நாம் கலைஞருக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும்.
எனவே அந்த வெற்றியை பெற்றுத்தருவதற்கு நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் உரையாற்றினார்.