சென்னை
மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி 10 நாட்களில் 12 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.
s
பிரதமர் மோடி கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்து பாஜக பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடத்திய பாத யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் கடந்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற போது பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.
மேலும் தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டியதோடு, பல்வேறு திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். திருநெல்வேலியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
தேர்தல் தேதி அறிவிப்பு நெருங்குவதால் அடுத்த 10 நாட்களில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார். இதையொட்டி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த 5 நாட்களில் 2-வது முறையாக மோடி இன்று தமிழகத்துக்கு வருகிறார்.
விமானம் மூலம் இன்று பிற்பகல் 2.45 மணிக்குச் சென்னை வரும் மோடி, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் செல்கிறார். கல்பாக்கத்தில் மதியம் 3.30 மணிக்கு அணு உலை ரியாக்டர் மேம்பாடு (உற்பத்தி) திட்டத்தைப் பார்வையிடுகிறார். பிறகு ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்குச் சென்னை விமான நிலையம் வருகிறார்.
சாலை மார்க்கமாகச் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இதில் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும், கூட்டணி கட்சியினரும் பங்கேற்கிறார்கள். இதையொட்டி பிரமாண்ட மேடை மற்றும் மோடியை வரவேற்று கட்அவுட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. கூட்டம் முடிந்ததும் மாலை 6.35 மணிக்கு விமானம் மூலமாகத் தெலுங்கானா செல்கிறார்.