தேர்தல் பிரச்சாரத்தில் மத உணர்வுகளைக் கிளறிய நரேந்திர மோடி!

Must read

வார்தா: அமைதியை விரும்பும் இந்துக்களை, தீவிரவாதத்துடன் தொடர்புப்படுத்தி மாபெரும் பாவத்தை செய்துவிட்டது காங்கிரஸ் என்று பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

மத உணர்வை கிளப்பும் வகையில், மராட்டிய மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு பேசியுள்ளார் பிரதமர் மோடி. மேலும், நாட்டின் பெரும்பான்மை மக்களான இந்துக்கள், சிறுபான்மையினராக வாழும் ஒரு தொகுதியை (கேரளாவின் வயநாடு) தான் போட்டியிட தேர்வு செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்றும் அவர் சாடியுள்ளார்.

தனது உரையின்போது, “ஹிந்து” மற்றும் “ஹிந்து தீவிரவாதம்” என்ற வார்த்தைகளை மொத்தம் 13 முறை பயன்படுத்தினார்.

ஹிந்து தீவிரவாதம் என்ற பதத்தை, கடந்த 2007ம் ஆண்டு நடந்த சம்ஜுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பின்போது, சில காங்கிரஸ் தலைவர்கள் பயன்படுத்தினர்.

ஏனெனில், குண்டுவெடிப்பு குறித்து நடைபெற்ற விசாரணைகளில், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய சுவாமி அசீமானந்த் உள்ளிட்ட பல இந்து அடிப்படைவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதாய் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரயில், டெல்லியிலிருந்து, பாகிஸ்தானின் லாகூருக்கு செல்லும் ரயிலாகும். இந்த குண்டுவெடிப்பில் இறந்த 70 அப்பாவிகளில், அதிகமானோர் பாகிஸ்தானியர்கள்.

எனவேதான், காங்கிரஸ் தலைவர்கள் பயன்படுத்திய அந்தப் பதத்தை, தற்போது தனது தேர்தல் வெற்றிக்காக உபயோகித்துள்ளார் மோடி.

“இந்துக்கள் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக வரலாற்றில் எங்கேனும் ஆதாரம் உண்டா?” எனக் கேட்டுள்ள மோடி, “இந்துக்களின் 5000 ஆண்டு பாரம்பரியத்தை காங்கிரஸ் களங்கப்படுத்தியுள்ளதோடு, இந்துக்களை தீவிரவாதத்துடன் தொடர்புப்படுத்துகிறது” என்றுகூறி மத உணர்ச்சிகளை கிளறியுள்ளார்.

மேலும், “காங்கிரசை நீங்கள் மன்னிப்பீர்களா?” என்று கூட்டத்தினரைப் பார்த்து மீண்டும் மீண்டும் கேட்டார் மோடி.

– மதுரை மாயாண்டி

More articles

Latest article