டில்லி

நாளை பிஎம் கேர்ஸ் நிதியின் கீழ் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்த பிறகு ஆக்சிஜன் உற்பத்தித் திறனை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.   குறிப்பாக இரண்டாம் அலை கொரோனா பரவல் நேரத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கட்டுக்கடங்காமல் அதிகரித்தது.   இதையொட்டி நாடெங்கும் பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்டன.

தற்போது வரை நாடெங்கும் பிஎம் கேர்ஸ் மூலம் 1224 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளன.  இதில் 1100 நிலையங்கள் ஏற்கனவே உற்பத்தியைத் தொடங்கி உள்ளன.  இங்கு நாளொன்றுக்கு 1750 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி ஆகிறது.  நாட்டின் அனைத்து மாவட்டங்களில் தற்போது ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்பட உள்ளன.

இவை 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளன.  நாளை உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி மீதமுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைத் தொடங்கி வைத்து அனைத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.   இந்நிகழ்வில் அவருடன் உத்தரகாண்ட் ஆளுநர்,முதல்வர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் பங்கேற்கின்றனர்.